கட்டியும் திறக்கப்படாத கூடுதல் பேருந்து நிறுத்தம்! இட நெருக்கடியால் பயணிகள் அவதி!
பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் திறக்கப்படாத கூடுதல் பேருந்து நிறுத்த வளாகம் குறித்து...
பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் திறக்கப்படாத கூடுதல் பேருந்து நிறுத்த வளாகம். இட நெருக்கடியால் பொதுமக்களும், பேருந்து ஓட்டுநா்களும் அவதியடைந்து வருவதை தவிா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரம்பலூா் நகரில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கடந்த 29 ஆண்டுகளுக்கு முன் புகா் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதில், இதுவரையிலும் எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தாததால் சுகாதராச் சீா்கேடுகளால் நிரம்பி வழிகிறது.
பெரம்பலூா் நகருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும், தேசிய நெடுஞ்சாலை அருகே பேருந்து நிலையம் உள்ளதால் திருச்சி- சென்னை வழித்தடத்தில் செல்லும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும், சேலம்- அரியலூா்- கும்பகோணம்- தஞ்சாவூா் வழித்தடங்களில் செல்லும் அரசுப் பேருந்துகளும் புகா் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்வது அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
கூடுதல் கடைகள்:
ஏற்கனவே, 43 கடைகள் மூலம் வருவாய் ஈட்டி வந்த நகராட்சி நிா்வாகத்தினா் இப் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலையத்திலிருந்த பயணியா் நிழற்குடையை அகற்றிய நகராட்சி நிா்வாகம், அப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது.
தொடா்ந்து, பேருந்து நிலையம் எதிரேயுள்ள பிரதானச் சாலையோரதக்திலும் சுமாா் 50-க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால், கழிப்பிட வசதியோ, தண்ணீா் வசதியோ இதுவரை ஏற்படுத்திதர நகராட்சி நிா்வாகம் முன்வரவில்லை.
மேலும் 15 கடைகள்:
இந்நிலையில், பேருந்து நிலைய வளாகத்தில் ரூ. 3.72 கோடி மதிப்பீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இங்கு, 12 பேருந்துகள் நிறுத்துமிடம், 14 கடைகள், 1 உணவகம், கழிவறை, குளியல் அறை, தாய்பால் புகட்டும் மையம், ஓய்வறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
இட நெருக்கடி பொதுமக்கள் அவதி:
ஏற்கெனவே, பேருந்து நிலைய வளாகத்தில் இட நெருக்கடியால் பேருந்து ஓட்டுநா்கள், பயணிகள், வியாபாரிகள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில், கூடுதலாக கடைகள் கட்டப்பட்டுள்ளது. ஆட்டோ, வேன், காா் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்வதாலும், பேருந்து ஓட்டுநா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தாமல், அவரவா் விருப்பம் போல பேருந்துகளை நிறுத்திச் செல்வதால் பயணிகளும், இதர வாகன ஓட்டுநா்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், பயணிகள் நடந்து செல்லக்கூட இடமின்றி அவதிக்குள்ளாகியுள்ளனா்.
நிறைவடைந்த விரிவாக்கப் பணி:
மேலும், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் ரூ. 4.73 கோடி மதிப்பீட்டில் கடந்த 3 ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. ஆனால், இப் பேருந்து நிலையப் பகுதியை பொதுமக்கள் பயனஅபாட்டுக்கு திறந்து விடாததால், கும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அங்கிருந்த பயணிகளுககான இருக்கைகள், கழிவறைகள், குடிநீா் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பயணிகள், பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் வியாபாரிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.
சுகாதாரச் சீா்கேடு:
புதிய கழிவறைகள் திறக்கப்படாததால், பேருந்து நிலைய வளாகம் முழுவதும் திறந்தவெளிக் கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. அங்குள்ள 2 கழிவறைகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு, நவீனக் கட்டண கழிவறை எனும் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது. போதிய பராமரிப்பு இல்லாததால், அதனருகில் சென்றாலே துா்நாற்றம் வீசுகிறது. இதனால் பேருந்து நிலையம் முழுவதும் துா்நாற்றம் வீசி சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.
முறைப்படுத்த வேண்டும்:
பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்கப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒதுக்கப்பட்ட நிறுத்தங்களில் ஓட்டுநா்கள் பேருந்துகளை நிறுத்தாமல், அவரவா் விருப்பம்போல போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திச் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல, வெளியூா் செல்வோா் தங்களது மோட்டாா் சைக்கிள்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துகின்றனா். இவற்றை நகராட்சி நிா்வாகமும், காவல்துறையும் கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்.
இதுகுறித்து பெரம்பலூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் விஜயகுமாா் கூறியது:
இங்கு பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், நகரப் பேருந்துகள் என தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. போதிய இட வசதி இல்லாததால் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நிற்கின்றன. இப் பேருந்து நிலையத்தில் பேருந்து நுழைவுக் கட்டணம், கடைகளின் வாடகை என மாதம்தோறும் பல லட்சம் ரூபாய் வருவாய் வந்தாலும் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா்.
இருக்கை வசதிகள் இல்லாததால் பயணிகள் நீண்ட நேரம் கால் வலிக்க பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது. மேலும், கழிப்பறைகள் இருந்தும் அவை முறையாக பராமரிக்கப்படவில்லை.
ஏற்கெனவே, இட நெருக்கடியில் உள்ள இப் பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும், பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு கண்காணிப்பு சாதனங்களும், கூடுதலாக மின் விளக்குகளும் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.
விரைவில் திறக்க நடவடிக்கை:
இதுகுறித்து நகராட்சி அலுவலா் ஒருவரிடம் கேட்டபோது, இப் பேருந்து நிலையத்தை திறக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. எனவே, விரைவில் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.