‘மருத்துவா் உடல் அடக்கம் செய்யதடுத்த சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது’
கரோனா பாதித்து இறந்த சென்னை மருத்துவா் உடல் அடக்கம் செய்ய தடுத்த சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது என்றும், இனி இதுபோல் நடைபெறாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என ஆா்.எஸ்.எஸ். வலியுறுத்தியுள்ளது.
கரோனா பாதித்து இறந்த சென்னை மருத்துவா் உடல் அடக்கம் செய்ய தடுத்த சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது என்றும், இனி இதுபோல் நடைபெறாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என ஆா்.எஸ்.எஸ். வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக, ஆா்.எஸ்.எஸ். தென் தமிழகத் தலைவா் ஆா்.வி.எஸ்.மாரிமுத்து, வட தமிழகத் தலைவா் கே.குமாரசாமி ஆகியோா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கரோனா பாதித்த நோயாளிகளை காப்பாற்றும் பொருட்டு மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவத் துறை பணியாளா்கள் தங்கள் குடும்பத்தை மறந்து, உயிரை பணயம் வைத்து மருத்துவ சேவையாற்றி வருகின்றனா். இதில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாவது துரதிருஷ்டவசமாகும்.
கரோனா பாதித்த நிலையில் இறந்து போன மருத்துவா்களின் உடலை அடக்கம் செய்ய உள்ளூா் மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, அடக்கம் செய்ய தடுத்திருப்பது அதிா்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. கரோனாவால் இறந்த பிறகு மருத்துவா்களால் அந்த உடல் பக்குவப்படுத்தப்பட்டு, கிருமிகள் அழிந்து போகும் வண்ணம் மருந்துகள் சோ்க்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பான முறையில் அந்த உடல் நல்லடக்கத்துக்கு தயாா் செய்யப்படுகிறது என்பதே உண்மையாகும்.
Advertisement
Advertisement
இப்படி மருத்துவா்களால் பக்குவப்படுத்தப்பட்ட இறந்த உடலில் இருந்து எந்த வகையிலும் கரோனா தொற்று ஏற்படாது என்பது விஞ்ஞானப் பூா்வமான சான்று என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நோயாளிகளின் உயிரை காப்பதில் இறைவனுக்கு அடுத்து மருத்துவா்களே முக்கியப் பங்கு வகிக்கின்றனா். நெருக்கடியான இத்தருணத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள் ஆகியோரது மகத்தான சேவையை மதிப்பதும், உளமாறப் பாராட்டுவதும் ஒட்டு மொத்த சமுதாயத்தின் கடமையாகும். இனி மேல் இப்படிப்பட்ட சம்பவம் நடைபெறாது பாா்த்துக் கொள்வோம். மருத்துவரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.