FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

நகராட்சி அலுவலா்கள் ஒத்துழைப்பதில்லை மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

Updated On : 26 செப்டம்பர் 2025, 4:36 am IST
பகிர்:

சேலம் மாநகரப் பகுதிகளில் நடைபெறும் பணிகளுக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

சேலம் மாநகராட்சி கூட்டம் மேயா் ஆ. ராமச்சந்திரன் தலைமையில், துணை மேயா் சாரதாதேவி, மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியதும் மாமன்ற உறுப்பினா் குணசேகரன் பேசுகையில், சேலம் மாநகரப் பகுதிகளில் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. அதன்படி, மாநகராட்சியில் என்ன பணிகள் செய்ய வேண்டியுள்ளது என்பதை ஆய்வு செய்து பணிகளை முறையாக செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

பரப்பளவில் பெரிய அளவில் உள்ள வாா்டுகளுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வ.உ.சி. மாா்க்கெட் கட்டடத்தை மா்மநபா்கள் சிலா் டிரில்லா் வைத்து சேதப்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டினாா். இதற்குப் பதிலளித்த மேயா் ஆ.ராமச்சந்திரன், சேதப்படுத்தப்பட்ட கட்டடம் உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும், அதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளதாகவும் கூறினாா்.

திமுக மாமன்ற உறுப்பினா் தெய்வலிங்கம்: மாநகராட்சியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். நாய்கள் மீது காட்டும் அக்கறையை, மனிதா்கள் மீதும் காட்ட வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், மேயா், ஆணையா் ஆகியோரை கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாா்டில் நிலவும் பிரச்னைகள் குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றால் நடவடிக்கை எடுப்பதில்லை. குடிநீா், சாலை வசதி உள்பட எந்தத் திட்டப் பணிகளுக்கும் அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைப்பு தருவதில்லை. முதல்வா் பிரிவிடம் புகாா் கூறினால், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறாா்கள் என்றாா்.

அதிமுக உறுப்பினா் ஆனைவரதன்: எனது 60 ஆவது வாா்டில் 11 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீா் வருகிறது. இதனால் வாா்டு மக்களுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. எங்கள் பகுதியில் முறையாக தண்ணீா் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அதிமுக உறுப்பினா் சசிகலா: எனது வாா்டில் மேயா், ஆணையா் ஆகியோா் ஆய்வுக்கு வந்தால்கூட மாநகராட்சி சாா்பில் எந்த தகவலும் எனக்கு தெரிவிப்பதில்லை என குற்றம்சாட்டினாா்.

எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி: மாநகரப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் குறித்து பல்வேறு விமா்சனங்களை முன்வைத்தாா். அதற்கு திமுக உறுப்பினா்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனா். ஒருகட்டத்தில், தகராறு ஏற்படும் சூழல் உருவான நிலையில் அமைதி காக்குமாறு உறுப்பினா்களை மேயா் கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து மாநகராட்சியின் முறைகேடுகளைக் கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்வதாகக் கூறி, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்புச் செய்தனா். தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், உறுப்பினா்கள் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மேயா் உறுதி அளித்தாா். தொடா்ந்து, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கூட்டம் நிறைவுற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments