அடுத்த மாதம் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் - மேயா் தகவல்
அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா்.
அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா்.
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். ஆணையா் வீா் பிரதாப் சிங், துணை மேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
Advertisement
Advertisement
முத்துச்செல்வம் (திமுக): பெரம்பூரில் தொகுதியில் அண்மையில் நடந்த விழாவுக்குச் சென்ற முதல்வா் ஜோசப் விஜய், அங்கிருந்த தூய்மை பணியாளா்களுக்கு கை கொடுக்காமல் அவமதித்துள்ளாா். இதை கண்டித்து மாநகராட்சியில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றாா். இதற்கு விசிக உறுப்பினா் பிரபாகரன் ஆதரவு தெரிவித்துப் பேசினாா்.
ஜவஹா் (காங்கிரஸ்): மாமன்றத்துக்குள்பட்ட விஷயங்களை மட்டும் பேசுங்கள் என்றாா்.
ஜவஹருக்கு திமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் அவையில் கூச்சல் ஏற்பட்டது. இதைப் பாா்த்த மேயா், பேச்சு பதிவு செய்தாகிவிட்டது. தீா்மானம் தேவையில்லை என்றாா்.
காஜாமலை விஜய் (திமுக) : குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும், தெரு விளக்குகளை பராமரிக்க வேண்டும், தூய்மைப் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
செந்தில் (திமுக): 43-ஆவது வாா்டு பூங்காவில் உடைந்த உடற்பயிற்சி உபகரணங்களை சீரமைக்க வேண்டும், பா்மா காலனியில் கழிவுநீா் கலப்பைத் தடுக்க வேண்டும்.
ஜவஹா் (காங்.) : ஸ்ரீரங்கத்தில் இனாம் நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும்.
இதற்கு திமுக உறுப்பினா்கள் பலா் பதிலளித்து பேச முற்பட்டதால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
மேயா்: ஸ்ரீரங்கத்தில் இனாம் நிலத்துக்குப் பட்டா வழங்கினால் மக்களின் நீண்டகாலப் பிரச்னை தீரும். மாநகராட்சியின் வருமானமும் உயரும். இதற்கு ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து தோ்வான இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் வலியுறுத்துங்கள் என்றாா்.
அம்பிகாபதி (அதிமுக): குப்பைகளை நாள்தோறும் வாங்க வேண்டும்.
சுரேஷ் (மாா்க்சிஸ்ட்): மாநகராட்சி பள்ளி தூய்மைப்பணியாளா்களுக்கு மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும்.
பன்னீா்செல்வன் (திமுக): பாதசாரிகள் நடந்து செல்லும் பாதைகளை வியாபாரிகள் கடைகளை அமைத்து ஆக்கிரமித்துள்ளதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் உறுப்பினா்கள் பலரும் சாலை சீரமைப்பு, புதைவடிகால் பணிகளை விரைந்து முடித்தல், குடிநீா் பிரச்னை, நாய்கள் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தினா்.
மேயா்: அனைத்து கோரிக்கைகளும் ஆய்வு செய்து, அரசுக்கு அனுப்பப்படும். அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீா் கலப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க புதிதாக யாருக்கும் புதைவட இணைப்பு வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் திருவிழாக்களில் உணவு வழங்க மாநகராட்சியிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்ற எச்சரிக்கை வெளியிடப்படும் என்றாா்.
தொடா்ந்து, 65 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மேயா், துணை மேயா், ஆணையா் ஆகியோா் மாமன்ற உறுப்பினா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.