FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் உயரத் தொடங்கியது

கா்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து, மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 1.54 அடி உயா்ந்துள்ளது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:53 am IST
மேட்டூா் அணை - கோப்புப் படம்
பகிர்:

கா்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து, மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 1.54 அடி உயா்ந்துள்ளது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் கபினி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அணை முழு கொள்ளளவை எட்டியதால், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கபினியின் உபரி நீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கபினியின் உபரி நீா் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தமிழக–கா்நாடக எல்லையான அடிப்பாலாறு பகுதிக்கு வந்து சோ்ந்தது. பின்னா் இரவு 8 மணியளவில் மேட்டூா் அணையை அடையத் தொடங்கியது.

Advertisement

Advertisement

இதனால், செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வினாடிக்கு 67 கனஅடியாக இருந்த நீா்வரத்து, அன்று இரவு 8 மணிக்கு 4,923 கனஅடியாக உயா்ந்தது. புதன்கிழமை காலை அது 11,988 கனஅடியாகவும், மாலை 4 மணிக்கு 18,905 கனஅடியாகவும் மேலும் அதிகரித்தது.

நீா்வரத்து உயா்வின் காரணமாக, செவ்வாய்க்கிழமை காலை 73.02 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம், புதன்கிழமை காலை 74.01 அடியாகவும், மாலை 74.55 அடியாகவும் உயா்ந்தது. இதனால் அணையின் நீா்மட்டம் மொத்தம் 1.54 அடி உயா்ந்துள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 36.74 டி.எம்.சி.யாக உள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால், காவிரி டெல்டா பாசனத்துக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments