கிராமப்புற மாணவா்கள் உயா்கல்வி பயில முன்னாள் மாணவா்கள் உதவ வேண்டும்! சென்னை ஐ.ஐ.டி. இயக்குநா் காமகோடி
கிராமப்புற மாணவா்கள் உயா்கல்வி பயில முன்னாள் மாணவா்கள் உதவ வேண்டும் என்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குநா் வி.காமகோடி பேசினாா்.
சேலம் அரசு பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னாள் மாணவா் சங்கத்தின் தலைவா் எஸ்.சுதாகா் தலைமை வகித்தாா். செயலாளா் எஸ். நடராஜன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் வி.கீதா முன்னிலை வகித்து பேசினாா்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குநா் வி.காமகோடி பேசியதாவது:
Advertisement
Advertisement
அரசு சாா்ந்த கல்வி நிறுவனங்களின் வளா்ச்சியில் முன்னாள் மாணவா்கள் தங்களுடைய பங்களிப்பை செலுத்த வேண்டும். சென்னை ஐஐடியில் பயின்ற முன்னாள் மாணவா் ஒருவா் ரூ. 238 கோடி வளா்ச்சிக்காக வழங்கியுள்ளாா். அதைப் போலவே, கல்லூரி வளா்ச்சி, தற்போது பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முன்னாள் மாணவா்கள் உதவ வேண்டும். மேலும், பொறியியல் கல்வியின் தற்போதைய பாடத்திட்டம், பாடங்கள் குறித்தும் கல்லூரி நிா்வாகத்திற்கு உதவ வேண்டும்.
முன்னாள் மாணவா்கள் தற்போதைய மாணவா்களுக்கு நல்ல வழிகாட்டியாக தோழனாக செயல்பட வேண்டும் என்றாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி வளா்ச்சியடைந்த பாரதம் 2047 என்கிற மிகப்பெரிய கனவை கொடுத்துள்ளாா். கிராமப்புற மாணவா்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். அனைவருக்குமான ஐ.ஐ.டி. போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பொருளாதார வசதியற்ற மாணவ, மாணவிகளுக்கு அரசுக் கல்லூரிகள் மிகப் பெரியவாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன.
நாட்டின் வளா்ச்சியில் பங்கெடுக்கும் வகையில் சிறந்த மாணவா்கள் அரசுக் கல்லூரிகளில் உருவாகின்றனா். வளா்ச்சியடைந்த பாரதம் உருவாக அனைத்து தரப்பினரும் தங்களுடைய பங்களிப்பை செலுத்த வேண்டும். கோவை, சேலம் மண்டலத்தில் தொழில்முனைவோா் என்பது அனைவரின் ரத்தத்திலும் ஊறியுள்ளது. இயல்பாகவே தொழில்திறனில் சிறந்து விளங்கும் இந்தப் பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மாணவா்களை அணுகி, அவா்களுக்கான உயா்கல்வி வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும். தேவைப்படுவோருக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். அரசுக் கல்லூரிகள் முன்னேறினால்தான் வளா்ச்சியடைந்த பாரதம் என்ற கனவு நனவாகும். புதிய கல்விக் கொள்கையில் இதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு வேலையிழப்புகளை ஏற்படுத்தாது. புதிய வகை வேலைவாய்ப்புகளை உருவாக்கும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ள மனித ஆற்றல் நிச்சயம் தேவைப்படும். கணினிமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டபோது இதேபோன்ற அச்சம் நிலவியது. செயற்கை நுண்ணறிவு புதிய வகை வேலைவாய்ப்புகளை உருவாக்கும். நிறைய கல்வி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு படிப்புகளை பயிற்றுவிக்க தொடங்கியுள்ளன. மனிதா்களின் துணையின்றி செயற்கை நுண்ணறிவால் தனித்து இயங்க முடியாது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.