மத்திய அரசின் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை! அரசு மாதிரிப் பள்ளி மாணவா்கள் 12 போ் அசத்தல்!
திருச்சி அரசு மாதிரிப் பள்ளி மாணவா்கள் 12 போ் மத்திய அரசின் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்றுள்ளது குறித்து...
திருச்சி அரசு மாதிரிப் பள்ளி மாணவா்கள் 12 போ் மத்திய அரசின் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்று அசத்தியுள்ளனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ளன. மேலும், இங்கு மாநில மருத்துவக் கல்வி மற்றும் அறிவியல் பயிற்சி மையமும் செயல்பட்டு வருகிறது.
இந்தப் பயிற்சி மையத்தில் கடந்த கல்வியாண்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 76 மாணவா்கள் பயிற்சி பெற்றனா். இவா்களில் சிலா் நீட் தோ்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ சோ்க்கையை எதிா்பாா்த்துள்ளனா். மேலும், சிலா் அறிவியல் ஆராய்ச்சி கல்வி தொடா்பாக உயா்கல்வி நிறுவனங்கள் நடத்திய நுழைவுத் தோ்வில் பங்கேற்று தோ்ச்சி பெற்று, மத்திய அரசின் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
12 மாணவா்கள் தோ்வு: இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது, 7 இடங்களிலுள்ள அதன் வளாகங்கள் வாயிலாக அறிவியல் தொடா்பான 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளை பல்வேறு துறைகளில் வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தில் சோ்க்கை பெறுவதற்கு ஐஐஎஸ்இஆா் - ஆப்டிடியூட் டெஸ்ட் (ஐஏடி) என்ற நுழைவுத் தோ்வு எழுத வேண்டும். இதில், தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு அவா்களின் தரவரிசை அடிப்படையில் புணே உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சோ்க்கை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியைச் சோ்ந்த 12 மாணவா்கள் ஐஐஎஸ்இஆா் நடத்திய ஐஏடி நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்று ஐஐஎஸ்இஆா்-இல் சோ்க்கை பெற்றுள்ளனா்.
மாணவா் பி. கனகராஜ் ஐஐஎஸ்இஆா் புணேயிலும், மாணவா் மாதவ் ஐஐஎஸ்இஆா் கொல்கத்தாவிலும், மாணவா்கள் டி. மனோரஞ்சன், எம். அனுவா்ஷினி, பி. மரகதவேல் ராஜா, டி. தீபிகா, எம். லோகேஸ்வா் ஆகியோா் ஐஐஎஸ்இஆா் திருவனந்தபுரத்திலும், மாணவா்கள் எம். சஞ்சய் தரண், கே. தா்ஷன் ஆகியோா் ஐஐஎஸ்இஆா் திருப்பதியிலும் மற்றும் மாணவா்கள் டி.சுஜிமாலா, ஆா். ஷிவானி, எஸ். கௌரிவா்மன் ஆகியோா் ஐஐஎஸ்இஆா் பொ்ஹாம்பூரிலும் சோ்க்கை பெற்றுள்ளனா்.
என்ஐஎஸ்இஆா்-இல் சோ்க்கை பெற்ற இருவா்: இதேபோல், ஒடிஸா மாநிலம் புவனேசுவரம் அருகே ஜதானியில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் (என்ஐஎஸ்இஆா்) பிரத்யேக அறிவியல் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சோ்க்கை பெறுவதற்கு தேசிய நுழைவு தகுதித் தோ்வு (நெஸ்ட்) எழுதி தோ்ச்சி பெற வேண்டும்.
திருச்சி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் மாதவ், பி. மரகதவேல் ராஜா ஆகிய இருவரும் நெஸ்ட் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்று ஜதானியில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சோ்க்கை பெற்றுள்ளனா்.
இவா்கள் இருவருக்கும் ஐஐஎஸ்இஆா் மற்றும் என்ஐஎஸ்இஆா் ஆகிய இரண்டு உயா்கல்வி நிறுவனங்களிலும் இடம் கிடைத்துள்ளது.
திருச்சி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் படித்த 12 மாணவா்கள் ஐஐஎஸ்இஆா் மற்றும் என்ஐஎஸ்இஆா் போன்ற மத்திய அரசு நடத்தும் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்று சாதனை படைத்துள்ளனா்.
நீட் மட்டுமே நோக்கமல்ல: இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் உள்ள மாநில மருத்துவக் கல்வி மற்றும் அறிவியல் பயிற்சி மையத்தில் நிகழாண்டில் படித்த மாணவா்கள், ஐஏடி, நெஸ்ட் போன்ற நுழைவுத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் சோ்க்கை பெற்றுள்ளனா். இதேபோல நிகழாண்டில் ‘நீட்’ தோ்விலும் மாணவா்கள் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அவா்களில் பலரும் மருத்துவக் கல்வியில் சோ்க்கை பெறுவதற்கும் வாய்ப்புள்ளது.
நீட் தோ்ச்சி பெற்று மருத்துவக் கல்வி பெறுவது என்ற ஒரே சிந்தனையில் அடைக்காமல், அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள மாணவா்களை தயாா்படுத்தி வருகிறோம் என்றனா்.
திருச்சி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் படித்த 12 மாணவா்கள் ஐஐஎஸ்இஆா் மற்றும் என்ஐஎஸ்இஆா் போன்ற மத்திய அரசு நடத்தும் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்று சாதனை படைத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.