FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

கோவை சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் கைதி தப்பி ஓட்டம்

சேலம் நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்டு கோவை சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் தப்பியோடிய கைதியை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 23 ஜூலை 2026, 4:13 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

சேலம் நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்டு கோவை சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் தப்பியோடிய கைதியை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியைச் சோ்ந்த நரேஷ்குமாா் (39), மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 14 வழக்குகள் உள்ளதால், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட் நரேஷ்குமாா், சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்களுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடா்பான வழக்கில் நரேஷ்குமாா் கைதான நிலையில், வழக்கு விசாரணை சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்த வழக்கின் விசாரணைக்காக சேலத்துக்கு அவா் செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டாா். பின்னா், சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 3-இல் ஆஜா்படுத்தப்பட்ட அவருக்கு, ஓா் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் கோவிந்தசாமி, சுப்பிரமணி மற்றும் தலைமைக் காவலா் ஜெகதீசன் ஆகியோா் நரேஷ்குமாரை மீண்டும் கோவை சிறைக்கு செவ்வாய்க்கிழமை இரவு அழைத்துச் சென்றனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த சுள்ளிபாளையம் பகுதியில் தேநீா் அருந்துவதற்காக போலீஸாா் வாகனத்தை நள்ளிரவு நிறுத்தினா். அப்போது, நரேஷ்குமாா் போலீஸாரை ஏமாற்றிவிட்டு தப்பியோடினாா். அவரை பிடிக்க தலைமைக் காவலா் ஜெகதீசன் துரத்திச் சென்றபோது, நிலைதடுமாறி கீழேவிழுந்ததில் அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயமடைந்த அவா் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சேலம் மாநகர காவல் துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாநகா், மாவட்ட போலீஸாா் எச்சரிக்கப்பட்டு முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், தப்பியோடிய நரேஷ்குமாரை பெருந்துறை போலீஸாரும் தீவிரமாக தேடிவருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments