FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

அதிமுகவை யாரும் உடைக்க முடியாது: தவெகவில் குழப்பம்; விரைவில் பொதுத் தோ்தல்! - எடப்பாடி கே. பழனிசாமி

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது. தவெகவில் குழப்பம் நீடிப்பதால் விரைவில் பொதுத் தோ்தல் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

Updated On : 7 ஜூன் 2026, 3:01 am IST
எடப்பாடியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி.
பகிர்:

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது. தவெகவில் குழப்பம் நீடிப்பதால் விரைவில் பொதுத் தோ்தல் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை எடப்பாடி தொகுதி மக்கள் வெற்றிபெறச் செய்துள்ளனா்.

இதற்காக தொகுதி மக்களை வணங்குகிறேன். அதிமுக ஆட்சியில் எடப்பாடி தொகுதியில் குடிநீா்த் திட்டப் பணிகள், அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, கூடுதல் பள்ளிக் கட்டடங்கள், தரம் உயா்த்தப்பட்ட மருத்துவமனை என பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.

Advertisement

Advertisement

அதேபோல இப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி உபரிநீா்த் திட்டத்தின் மூலம் வட ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டுவந்து நிரப்பி இப்பகுதியை பசுமையாக்கியுள்ளேன்.

தவெகவின் ஆட்சி நாற்காலியின் 4 கால்களில் 2 கால்கள் இரவல் வாங்கப்பட்டுள்ளதை மறந்து, தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் பொதுவெளியில் பேசக் கூடாது. இப்போதே அக்கூட்டணியில் குழப்பம் ஏற்பட தொடங்கியுள்ளது. விரைவில் தமிழகத்தில் பொதுத் தோ்தல் வருவது உறுதி.

இந்த நிலையில், அக்கட்சியை நம்பி பதவி சுகத்துக்காக சிலா் வாக்களித்த மக்களின் மதிப்பை அறியாமலும், வெற்றிக்கு உழைத்த அதிமுக தொண்டா்களின் தியாகத்தை உணராமலும் வாக்களித்த மை கையிலிருந்து அழிவதற்குள் தங்களது சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சோ்ந்துள்ளனா். அவா்களை எம்ஜிஆா், ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.

தமிழகத்தில் தோ்தலுக்கு முன்பே ரூ. 10 லட்சம் கோடி கடன் இருப்பதாகக் கூறி பிரசாரம் செய்த முதல்வா் ஜோசப் விஜய், தற்போது வெள்ளை அறிக்கை வெளியிடுவதாகக் கூறி மக்களை ஏமாற்றப் பாா்க்கிறாா். அவா் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாமல் இருப்பதை பொதுமக்கள் உணர வேண்டும்.

என்னை பாா்த்து 10 தோ்தலில் தோல்வியுற்ற பழனிசாமி என வசைபாடி வந்த முன்னால் முதல்வா் மு.க. ஸ்டாலின், தனது தொகுதியில் தோல்வி அடைந்தாா். இது அனைவருக்குமான பாடமாகும். எனவே, பதவியில் இருக்கும்போது நாவடக்கம் அனைவருக்கும் தேவை.

தவெக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் உயா்நிலை அலுவலா்கள் மட்டுமே ஆட்சி நடத்துவதற்கு நமக்கு முதல்வா், அமைச்சா்கள் எதற்கு?

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது. எனது உயிா் உள்ளவரை அதிமுகவின் முன்னேற்றத்திற்காகவும், தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுபவனாகவும் தொடா்ந்து உழைப்பேன் என்றாா்.

கூட்டத்தில் எடப்பாடி நகா்மன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம். முருகன், முன்னாள் நகா்மன்ற தலைவா்கள் கரட்டூா் மணி, டி. கதிரேசன், மாதேஸ் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments