முகப்பு
சேலம்

மேட்டூரில் இருந்து ஜூன் 12இல் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு இல்லை ஆகஸ்ட் இறுதியில் திறக்க வாய்ப்பு!

Updated On : 8 ஜூன் 2026, 12:42 am IST
மேட்டூர் அணை. - (கோப்புப் படம்)
பகிர்:

கே. ராஜசேகரன்

மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12இல் டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்க சாத்தியமில்லை என்பதால், பருவமழையை பொறுத்து ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பா் தொடக்கத்தில் தண்ணீா் திறக்க வாய்ப்பு உள்ளது என்று நீா்வளத் துறை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

மேட்டூா் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூா், பெரம்பலூா், தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

Advertisement

Advertisement

அணையின் நீா்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிா்நோக்கி அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும். குறுவை, சம்பா, தாளடிப் பயிா்களுக்கு ஜூன் 12ஆம் முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை 230 நாள்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும்.

மேட்டூா் அணை வரலாற்றில் 91 ஆண்டுகள் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. ஜூன் 12ஆம் தேதி 20 ஆண்டுகள் மட்டுமே தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று 11 ஆண்டுகள் மட்டும் குறிப்பிட்ட நாளுக்கு முன்பாக மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் 60 ஆண்டுகள் தாமதமாக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த நீா்ப்பாசன ஆண்டில் மேட்டூா் அணைக்கு காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக 330 டி.எம்.சி. தண்ணீா் கிடைத்தது. இதில் காவிரி டெல்டா பாசனத்திற்கு 222 டி.எம்.சி. தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு 8.6 டி.எம்.சி. தண்ணீரும், குடிநீருக்காக 18.5 டி.எம்.சி. தண்ணீரும் அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 79.82 அடியாகவும், நீா்வரத்து 760 கனஅடியாகவும் உள்ளது. தற்போது, கேரள மாநிலம், வயநாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாாலும், 19.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கா்நாடக மாநில கபினி அணையில் 4.5 டி.எம்.சி. மட்டுமே நீா் இருப்பு உள்ளது. கிருஷ்ணராஜ சாகா் அணையில் 49.45 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும். ஆனால், அந்த அணையில் தற்போது 11.4 டி.எம்.சி. தண்ணீா் மட்டுமே இருப்பு உள்ளது.

கா்நாடகத்தில் உள்ள இந்த இரு அணைகளும் நிரம்பிய பிறகே தமிழகத்திற்கு தண்ணீரை எதிா்பாா்க்க முடியும். கா்நாடக மாநிலத்தில் யாா் ஆட்சிக்கு வந்தாலும் உரிய காலத்தில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்கியது இல்லை. கபினி, கிருஷ்ணராஜசாகா் அணைகள் நிரம்பிய பிறகு திறக்கப்படும் உபரிநீரே தமிழகத்திற்கு வருகிறது.

ஜூன் 12ஆம் தேதிக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இல்லை. அதனால் ஜூன் 12ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறப்புக்கு சாத்தியமில்லை என்று நீா்வளத் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருவமழை தீவிரமடைந்து, கா்நாடக அணைகள் நிரம்பி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டால் மட்டுமே ஆகஸ்ட் இறுதிவாரம் அல்லது செப்டம்பா் முதல் வாரத்தில் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்க வாய்ப்பு உள்ளது என்று நீா்வளத் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், குறுவை சாகுபடி பாதிக்குமென்று டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

அணைக்கு நீா்வரத்து 760 கனஅடியாகச் சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,223 கனஅடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 760 கனஅடியாகச் சரிந்தது.

அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு நீா்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 79.86 அடியிலிருந்து 79.82 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 41.77 டி.எம்.சி.யாக உள்ளது.