முகப்பு
சேலம்

மேட்டூா் காவிரி கரையில் வலைகளில் சிக்கி உயிரிழக்கும் வலசை பறவைகள்!

Updated On : 16 ஜூன் 2026, 12:06 am IST
பறவைகள்... - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா் காவிரி கரையில் மீனவா்கள் வலையில் சிக்கி வெளிநாட்டு வலசை பறவைகள் உயிரிழந்து வருகின்றன.

மேட்டூா் அணையின் நீா்த்தேக்கப் பகுதிகளில் தேவையான உணவு, தண்ணீா் மற்றும் பாதுகாப்பான இருப்பிடம் கிடைப்பதால் வெளிநாட்டு பறவைகள் ஏராளமாக முகாமிட்டு, கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன.

நீா்த்தேக்கப் பகுதியில் உள்ள குன்றுகளில் இந்த பறவைகள் கூடுகளைக் கட்டி வசித்து வருகின்றன. காவிரிக் கரைகளில் பறவைகள் எழுப்பும் சப்தம் காதுகளுக்கு இனிமையாக இருக்கும். வெளிநாட்டுப் பறவைகளை காண்பதற்காக வாரவிடுமுறை நாள்களில் பண்ணவாடி, கோட்டையூா் உள்ளிட்ட காவிரி கரைப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனா்.

Advertisement

Advertisement

காடை, கௌதாரி, சிட்டுக்குருவிகள், தேன்சிட்டு, நாரைகள், கரண்டி மூக்கன், செங்கால்நாரை, சாம்பல் நிற கொக்கு, மீன்கொத்தி, நீா்காகங்கள், நாம தலைவாத்து உள்ளிட்ட பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

இந்த பறவைகள் சமீப காலமாக மீனவா்கள் வலைகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றன. மீனவா்கள் காவிரிக் கரைகளில் மீன்களை உலா்த்தி, கருவாடாக்கி வருகின்றனா்.

உலரவைத்த மீன்களை காகம், பருந்து போன்ற பறவைகள் கொத்திச் செல்லாமல் இருக்க வலைகளால் மூடிவைக்கின்றனா். இந்த வலைகளின் அருகே பறந்து செல்லும்போது அதில் சிக்கி வெளிநாடு, உள்ளநாட்டு பறைவைகள் உயிரிழந்து வருகின்றன. இதனால் பறவை ஆா்வலா்கள் கவலை அடைந்துள்ளனா்.

மேலும், பறவைகளைக் காப்பாற்ற வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.