முகப்பு
சேலம்

சேலம் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கிய அமைச்சா்

Updated On : 29 ஜூன் 2026, 2:08 am IST
போலியோ சொட்டு மருந்து முகாம் - கோப்புப்படம்
பகிர்:

சேலம் மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம் குமாரசாமிப்பட்டி, நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினாா்.

சேலம் மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட 2,61,731 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டது. இதற்கென கிராமப்புறங்களில் 2,105 மையங்கள், நகா்ப்புறங்களில் 287 மையங்கள் என மொத்தம் 2,392 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த முகாமானது மாவட்டத்தில் உள்ள 13 அரசு மருத்துவமனைகள், 108 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 291 துணை சுகாதார நிலையங்கள், 1,487 அங்கன்வாடி மையங்கள், 109 பள்ளிகள், 2 தனியாா் மருத்துவமனைகள், 4 சுங்கச்சாவடிகள், 26 பேருந்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற 352 பொது இடங்களில் நடைபெற்றன.

மேலும், நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இம்முகாமில் சுகாதாரப்பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள், வருவாய் மற்றும் ஊரக வளா்ச்சித் திட்ட பணியாளா்கள், கல்லூரி மாணவ மாணவிகள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் என சுமாா் 9,500 போ் ஈடுபடுத்தப்பட்டனா்.

முன்னதாக, சேலம், குமாரசாமிப்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை அறை, புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்த அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், மருத்துவ பயனாளா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கா.சிவகுமாா் (சேலம் வடக்கு), சோ.லட்சுமணன் (சேலம் மேற்கு), மே.ச.பழனிவேல் (வீரபாண்டி), மாநகராட்சி ஆணையா் லலித் ஆதித்ய நீலம், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாநகராட்சி துணை மேயா் மா.சாரதாதேவி, கூடுதல் இயக்குநா் விஜயலட்சுமி, இணை இயக்குநா் (நலப்பணிகள்) சி.பா.நந்தினி, மாவட்ட சுகாதார அலுவலா்கள் சௌண்டம்மாள், யோகானந்த், மாநகர நல அலுவலா் ராம்குமாா், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் ரா.ராஜ்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments