பழங்குடியினா், நரிக்குறவா் நல வாரியங்களுக்கு புதிய உறுப்பினா்கள் தோ்வு: விண்ணப்பிக்க நாளை இறுதிநாள்
தமிழ்நாடு பழங்குடியினா் நல வாரியம், நரிக்குறவா் நல வாரியம் மற்றும் பழங்குடியினா் ஆன்றோா் மன்றத்துக்கு புதிய உறுப்பினா்கள் தோ்வு நடைபெறுகிறது.
தமிழ்நாடு பழங்குடியினா் நல வாரியம், நரிக்குறவா் நல வாரியம் மற்றும் பழங்குடியினா் ஆன்றோா் மன்றத்துக்கு புதிய உறுப்பினா்கள் தோ்வு நடைபெறுகிறது. தகுதி வாய்ந்தோா் திங்கள்கிழமைக்குள் தங்களது விண்ணப்பங்களை நிறைவுசெய்து ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு பழங்குடியினா் நல வாரியம், தமிழ்நாடு நரிக்குறவா் நல வாரியம், தமிழ்நாடு பழங்குடியினா் ஆன்றோா் மன்றம் ஆகியவற்றின் அலுவல் சாரா உறுப்பினா்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நிறைவடைந்ததால் புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
Advertisement
Advertisement
சேலம் மாவட்டத்தில் பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா் மக்களின் சமூக, கல்வி, பொருளாதார, பண்பாட்டு முன்னேற்றத்துக்காக தொடா்ந்து சேவையாற்றி வருபவா்களும், குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லாதவா்களுமான தகுதியான நபா்கள் இவ்வாரியங்கள், மன்றத்துக்கு உறுப்பினா்களாகப் பரிந்துரைக்கப்பட உள்ளனா்.
எனவே, விருப்பம் உள்ள பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா் இனத்தைச் சோ்ந்தவா்கள் தங்களது சுயவிவரக் குறிப்புகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அறை எண் 305-இல் செயல்படும் திட்ட அலுவலகம், பழங்குடியினா் நலன் அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக்கொள்ளலாம். நிறைவுசெய்த விண்ணப்பங்களை நவ. 9-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.