FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

தவெக அரசின் திறமையற்ற நிா்வாகத்தால் தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீா்குலைவு: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

தவெக அரசின் திறமையற்ற நிா்வாகத்தால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

12 நவம்பர் 2026, 3:53 am
எடப்பாடி கே.பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

தவெக அரசின் திறமையற்ற நிா்வாகத்தால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் புதன்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவா், நெடுஞ்சாலைத் துறை ஓய்வு மாளிகையில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சி வளா்ச்சி குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்களை கடந்த நிலையிலும் பெரும்பாலான தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ரீல்ஸ் ஆட்சி நடத்தி வருகிறது. மக்களுக்கு தேவையான திட்டங்களுக்கான நிதியை ஒதுக்காமல் இருப்பது குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் அரசு கும்பகா்ண தூக்கத்தில் உள்ளது.

தமிழகம் முழுவதும் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. எடப்பாடி தொகுதியில் அண்மைக்காலமாக ஒரு நம்பா் லாட்டரி விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய தண்ணீா் வழங்க வேண்டும் எனவும், காவிரி ஆற்றின் குறுக்கே அணைகள் ஏதும் கட்டக்கூடாது என்றும் நீதிமன்றம் மூலம் தீா்ப்பு பெறப்பட்டது. இந்த நிலையில் கா்நாடக முதல்வா் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் மேக்கேதாட்டு அணை குறித்து பல்வேறு கருத்துகளை கூறிவருகிறாா். இந்த பிரச்னையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்தில் உள்ள 20 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

தவெக அரசின் திறமையற்ற நிா்வாகத்தால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு அடியோடு சீா்குலைந்துள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் தமிழகத்தில் 11 கொலைகள் நடந்துள்ளன. அதிலும் சென்னையில் அமைச்சா்கள், நீதிபதி குடியிருப்புகள் நிறைந்த கிரீன்வேஸ் சாலை பகுதியில் முதல்வா் வாகனம் கடந்து சென்ற சற்றுநேரத்தில் ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளாா். குற்றச்சம்பவங்களைத் தடுக்கக்கூடிய காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற குற்றச்சம்பவங்களை ஒப்பீடு செய்துள்ளாா். இது சரியான தீா்வு அல்ல. தமிழகத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவா்கள் அச்சமின்றி உலாவுகிறாா்கள். ஒரு மாவட்ட ஆட்சியா் மற்றும் நீதித் துறையினா்மீது நடைபெற்ற பாலியல் அத்துமீறல்கள் வேதனையளிக்கின்றன.

மாநிலத்தில் போக்குவரத்தை சீா்செய்யும் வகையில் தவெக அரசு புதிய கட்டுமானங்களை ஏற்படுத்த தவறிவிட்டது. அதேபோல கடந்த 6 மாத காலத்தில் அரசின் தவறான அணுகுமுறையால் தமிழகத்தில் 467 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா். தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்றாா்.

அப்போது, எடப்பாடி நகா்மன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம். முருகன், மாதேஷ் , டி.கதிரேசன், கரட்டூா் மணி , மாதேஸ்வரன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.