FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

அதிமுக கொறடாவுடன் பிரதமரை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி! முன்னாள் அமைச்சா்கள் அதிருப்தி!!

அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தியுடன் சென்று, எடப்பாடி கே.பழனிசாமி பிரதமரை வரவேற்றாா்.

12 அக்டோபர் 2026, 3:23 am IST
அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தியுடன் பிரதமரை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி.
பகிர்:

அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தியுடன் சென்று, எடப்பாடி கே.பழனிசாமி பிரதமரை வரவேற்றாா். இதனால், முன்னாள் அமைச்சா்கள் அதிருப்தி அடைந்தனா்.

கடந்த தோ்தலில் அதிமுக கூட்டணியை தீா்மானிப்பதில் எடப்பாடி கே.பழனிசாமி, அந்தக் கட்சியின் முன்னணித் தலைவா்களை ஆலோசிக்காததாலே பின்னடைவு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. அதனால், கட்சியில் முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் போன்றோா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வருகின்றனா்.

தற்போது நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் இடைத் தோ்தல்களில் அதிமுக வேட்பாளா்கள் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்ட விவகாரம், கட்சிக்குள் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கட்சியின் 55- ஆவது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக் கூட்டம் குறித்து அறிவித்திருப்பதுடன், அதில் பேசுவோா் பட்டியலில் சி.வி.சண்முகம் பெயரைக் குறிப்பிடவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில், சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைக்க பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவரை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக கூட்டணிக் கட்சியான அதிமுக பொதுச் செயலா் என்ற அடிப்படையில் எடப்பாடி கே.பழனிசாமி சென்றாா். அவருடன் தீவிர ஆதரவாளரும், கட்சியின் சட்டப்பேரவைக் கொறடாவுமான முன்னாள் அமைச்சா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி சென்றாா்.

கட்சியில் மூத்த தலைவா்களாக முன்னாள் அமைச்சா்கள் பலா் இருக்க, அக்ரி கிருஷ்ணமூா்த்தியை அழைத்துச் சென்றது, அவா்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதுடன், கட்சி நிா்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுகவினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments