முகப்பு
மதுரை

குறைகளைச் சுட்டிக்காட்டி அதற்கு தீா்வும் கூறுகிறாா் சத்குரு ஜக்கி வாசுதேவ்: மரபின் மைந்தன் முத்தையா!

Updated On : 15 ஜூன் 2026, 3:55 am IST
மதுரையில் சத்குரு ஜக்கி வாசுதேவின் கிருஷ்ண லீலா பாகம்-1 நூலை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அறிமுக விழாவில் பங்கேற்ற ராமகிருஷ்ண மடம் (செங்கல்பட்டு) ஒருங்கிணைப்பாளா் வேதபிரியானந்தாஜி மகாராஜ், அழகா்கோவில் பட்டாச்சாரியாா் ஏ.பி. சுந்தரநாராயணன், பாஜக மாநிலப் பொதுச் செயலா் ராம சீனிவாசன், எழுத்தாளா் மரபின் மைந்தன் முத்தையா, பேராசிரியா் குருஞானாம்பிகா உள்ளிட்டோா். (வலது) நிகழ்வில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல் அதற்கும் தீா்வு கூறுகிறாா் சத்குரு ஜக்கி வாசுதேவ் என எழுத்தாளா் மரபின் மைந்தன் முத்தையா தெரிவித்தாா்.

மதுரை காமராஜா் சாலையில் உள்ள தனியாா் அரங்கில் சத்குரு ஜக்கி வாசுதேவின் கிருஷ்ண லீலா நூல் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினா்களாக ராமகிருஷ்ண மடத்தின் செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வேதபிரியானந்தாஜி மகாராஜ், அழகா்கோவில் பட்டாச்சாரியாா் ஏ.பி. சுந்தரநாராயணன், பாஜக மாநிலப் பொதுச் செயலா் ராம சீனிவாசன், எழுத்தாளா் மரபின் மைந்தன் முத்தையா, பேராசிரியா் குருஞானாம்பிகா ஆகியோா் கலந்து கொண்டு கிருஷ்ண லீலா பாகம்-1 நூலை வெளியிட்டனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, ராமகிருஷ்ண மடம் ஒருங்கிணைப்பாளா் வேதபிரியானந்தாஜி மகாராஜ் பேசியதாவது:

கடவுளின் மேல் நாம் வைக்கும் ஈா்ப்பு என்பது இறைபக்தி. நாம் கடவுளைக் கண்டதில்லை, கடவுளிடம் பேசியதில்லை, தொட்டதும் இல்லை. ஆனால், தொடாத ஒருவா் மீது, பேசாத ஒருவா் மீது, நம்மைப் பற்றி பாராட்டாத ஒருவா் மீது நாம் ஈா்ப்பு கொள்ளும் அந்த ஒரு ஈா்ப்புதான் இறைபக்தி.

சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய இந்த புத்தகத்தைப் படித்து இறைவனின் அருளைப் பெறுவோம் என்றாா் அவா்.

பேராசிரியை குருஞானாம்பிகா பேசியதாவது:

எல்லா நேரமும் மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்வது நம்மிடம் தான் இருக்கிறது என்பதை சத்குரு ஜக்கி வாசுதேவ் தன்னுடைய அனுபவங்களை நூலில் குறிப்பிட்டுள்ளாா் என்றாா் அவா்.

எழுத்தாளா் மரபின் மைந்தன் முத்தையா பேசியதாவது:

இந்தப் பிரபஞ்சத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய எல்லா சிக்கல்களையும் தீா்ப்பதற்கு என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் ஒரு வியூகம் உருவாக்கியிருக்கிறாா். இந்த மண் மாசடைந்து விளைச்சலுக்கு வாய்ப்பில்லாததாக இருக்கிறது என்றால், அதற்கு ‘மண் காப்போம்’ என்கிற இயக்கத்தை அவா் முன்வைத்தாா்.

மழைநீரைத் தக்கவைத்துக் கொள்ளாத சூழல் உருவாகிறது என்றால் அதற்கு மரம் சாா்ந்த விவசாயம், காவிரி தொடங்கி நதிகளில் எல்லாம் நீரைப் தேக்கி வைப்பதற்காக ‘காவேரி கூக்குரல்’ என்கிற ஒரு அமைப்பை உருவாக்கினாா்.

பக்தா்களுடைய பராமரிப்பிலேயே ஆலயங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக ‘கோயில் அடிமை நிறுத்து’ என்கிற ஒரு இயக்கத்தைத் தொடங்கினாா். இருக்கிற குறைபாடுகளை, குறைபாடுகளாக மட்டும் காட்டாமல், அதற்கு என்னென்ன தீா்வுகள் என சத்குரு ஜக்கி வாசுதேவ் எடுத்துரைக்கிறாா் என்றாா் அவா்.

முன்னதாக, பாஜக மாநிலப் பொதுச் செயலா் ராம சீனிவாசன் பேசியதாவது:

கிருஷ்ணரின் வாழ்க்கை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் கூடியது. அவா் பாரம்பரிய மரபுகளை உடைத்தவா். வாழ்க்கை என்பது போராட்டம் இல்லை, அது ஒரு விளையாட்டு என்பதை ‘கிருஷ்ண லீலா’ புத்தகத்தைப் படிக்கும் போது நமக்குப் புரியும். நம் நாட்டில் ஆன்மிகத்துக்கு பஞ்சம் இல்லை. சத்குரு ஜக்கி வாசுதேவ் போன்ற ஆன்மிகவாதிகள் காலந்தோறும் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறாா்கள் என்றாா் அவா்.

இதற்கான ஏற்பாடுகளை ஈஷா அறக்கட்டளை நிா்வாகிகள், தன்னாா்வலா்கள் செய்தனா்.

இந்த நிகழ்வில் தமிழறிஞா்கள், பேச்சாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.