தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் போராட்டம்: 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 301 பேர் கைது
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் வியாழக்கிழமை மறியல் மற்றும்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் வியாழக்கிழமை மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றதில், 2 திமுக எம்.எல்.ஏ.க்கள் உள்பட 301 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த 2 நாள்களாக பல்வேறு அமைப்புகள் சார்பில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திண்டுக்கல் பேருந்து நிலையப் பகுதியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு, மாவட்டச் செயலர் சி. பாலசந்திர போஸ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி. பாலசுப்பிரமணி, பொருளாளர் என். சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.1 கோடி வழங்க வேண்டும். பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.10 முதல் ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். பிரச்னைக்கு காரணமான ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். தமிழகத்தில் அமைதி நிலவ ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்து, திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
2 திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது: இதனிடையே, துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல், வத்தலகுண்டு, குஜிலியம்பாறை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் ஆகிய இடங்களிலும் வியாழக்கிழமை பிற்பகலில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, திமுக துணைப் பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ. பெரியசாமி தலைமை வகித்தார். இவர் மற்றும் இப்போராட்டத்தில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினர் ஐ. செந்தில்குமார் உள்பட 75 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல், குஜிலியம்பாறையில் திமுக ஒன்றியச் செயலர் ஸ்ரீநிவாசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 15 பேரும், வத்தலகுண்டு பகுதியில் ஒன்றியச் செயலர் கே.பி. முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, நிலக்கோட்டையில் ஒன்றியச் செயலர் மாயாண்டி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.