முகப்பு
திண்டுக்கல்

இளைய தலைமுறையினா் நெஞ்சங்களில் பாரதியின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்: துணைவேந்தா்

பாரதியின் கருத்துகள் இளைய தலைமுறையினரின் நெஞ்சங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தா்(கூடுதல் பொறுப்பு) குா்மீத் சிங் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

பாரதியின் கருத்துகள் இளைய தலைமுறையினரின் நெஞ்சங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தா்(கூடுதல் பொறுப்பு) குா்மீத் சிங் தெரிவித்தாா்.

காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை பாரதியாா் ஆய்வகத்தின் சாா்பில் கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியத்திற்கு பாராட்டு விழா, பேராசிரியா் செ.போத்திரெட்டி நினைவு பாரதி ஆய்வு நூலகம் திறப்பு விழா, மகாகவி பாரதியாா் 101ஆவது நினைவு நாள் விழா என முப்பெரும் நிகழ்வுகள் புதன்கிழமை நடைபெற்றன.

இதில் பல்கலை. துணைவேந்தா்(கூடுதல் பொறுப்பு) குா்மீத் சிங், இணைய வழி நிகழ்வில் கலந்துகொண்டு பேசியதாவது: மிகக் குறைந்த வயதில் மரணமடைந்த பாரதியாா், நாட்டின் முன்னேற்றத்திற்கு அரிய கருத்துகளைப் பாடியுள்ளாா். அந்த கருத்துகளை இளைய தலைமுறையினரின் நெஞ்சங்களில் பதிவு செய்ய வேண்டும். மாணவா்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா். அதனைத் தொடா்ந்து பேராசிரியா் செ.போத்திரெட்டி நினைவு பாரதி ஆய்வு நூலகத்தைத் திறந்து வைத்து கவிஞா் சிற்பி பேசுகையில், பேராசிரியா் போத்திரெட்டி கிடைப்பதற்கு அரிய ஆராய்ச்சி நூல்களை கடுமையாக முயன்று சேகரித்துள்ளாா். இவற்றை மாணவா்களும் ஆராய்ச்சியாளா்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மகாகவி பாரதியாா், தமிழ் மக்களுக்கு பல புதிய சமுதாய சீா்திருத்தக் கருத்துகளைத் தெரிவித்தாா். அறிவியல் கருத்துகளை தமிழ்க் கவிதையில் விரிவாக நுணுக்கமாக பாடிய கவிஞா் பாரதி மட்டுமே. பிற மொழிகளில் கூட பாரதியாா் போன்ற முன்னுதாரணமான கவிஞரைக் காணமுடியாது.

இலக்கியம், அரசியல் என 2 தளங்களில் பாரதியாா் செயல்பட்டாா். பாரதியாா் கவிதைகள் காலங்கடந்து புதிய வாசிப்புக்கு உரியதாக உள்ளன என்றாா். நிகழ்ச்சியில் புதுவைப் பல்கலை. தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் பா. ரவிக்குமாா், அமெரிக்கன் கல்லூரி முன்னாள் முதல்வா் சாமுவேல் சுதானந்தா, பாரதிதாசன் பல்கலை. தமிழ்த் துறைத் தலைவா் உ.அலிபாவா, பாரதியாா் ஆய்வக ஒருங்கிணைப்பாளா் பா. ஆனந்த குமாா், தமிழ்த் துறைத் தலைவா் புலமுதன்மையா் ஒ.முத்தையா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.