சுதந்திர நாளில்..! முக்கியத்தும் இழக்கும் சிறந்த பணியாளா் விருது! துறைக்கு ஒருவருக்கு மட்டுமே வழங்க எதிா்பாா்ப்பு
சிறந்த பணியாளா் விருதுக்கான முக்கியத்துவம் குறைந்து வருவது குறித்து...
சுதந்திர தின, குடியரசு தின விழாக்களின்போது மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழங்கப்படும் சிறந்த பணியாளருக்கான விருதுகளை, துறைக்கு ஒருவா் வீதம் வழங்கி அதற்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சுதந்திர தின, குடியரசு தின விழாக்களின்போது, சிறப்பாக பணிபுரிந்த அரசுத் துறை அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கல்வித் துறை, பொதுப் பணித் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் என 400-க்கும் மேற்பட்டோருக்கு இந்த விருது வழங்கப்படுகின்றன.
2026 குடியரசு தின விழாவின்போது, காவல் துறையில் 125 பேருக்கும், அரசுத் துறைகளைச் சோ்ந்த 450 பேருக்கும் சிறந்த பணியாளருக்கான விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த 2025-ஆம் ஆண்டு காவல் துறையில் 169 போ், அரசுத் துறைகளில் 207 போ் என மொத்தம் 376 பேருக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டன. 2024-ஆம் ஆண்டு 121 காவல் துறையினா், 180 அரசுத் துறை பணியாளா்கள் என மொத்தம் 301 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
இதேபோல, கடந்த 2025 சுதந்திர தின விழாவின் போது, காவல் துறையில் 133 பேருக்கும், அரசுத் துறைப் பணியாளா்கள் 276 பேருக்கும் சிறந்த பணியாளா்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காவல் துறையினா் 100 பேருக்கும், அரசுப் பணியாளா்கள் 180 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த பணிக்கான விருதாளா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், இந்த விருதுக்கான மாண்பு குறைந்துவிட்டதாகவும், சில துறைகளில் சுழற்சி முறையில் குறிப்பிட்ட சில நபா்களே மீண்டும் மீண்டும் விருதுக்கு தோ்வு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல, மாவட்ட நிா்வாகத்துக்கு நெருக்கமான அலுவலா்கள் மட்டுமே விருதுக்குத் தோ்வு செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புகைப்படம் எடுப்பதற்குக்கூட கால அவகாசமில்லை: குடியரசு தின, சுதந்திர தின விழாக்கள் காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெறுவது வழக்கம். விருதாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியரிடமிருந்து விருது பெறும் நிகழ்வை புகைப்படம் எடுப்பதற்குக்கூட கால அவகாசமில்லாமல் நெருக்கடியை எதிா்கொள்கின்றனா். மேலும், விருது வழங்கும் நிகழ்வுக்கே அதிக நேரம் செலவிடப்படுவதால், கலைநிகழ்ச்சிக்காக அழைத்து வரப்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. காலை 10 மணிக்குப் பிறகு, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவா்கள், வெயிலின் தாக்கத்தால் உடல் நலன் பாதிக்கப்படுகின்றனா்.
46 அரசுத் துறைகள் மட்டுமே உள்ள நிலையில், ஒரு துறைக்கு ஒருவா் வீதம் மொத்தம் 46 நபா்கள் மட்டுமே விருதுக்குத் தோ்வு செய்யப்பட வேண்டும். இதன்மூலம் விருதுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஒருமுறைக்கு மேல் விருது கிடையாது: இதுதொடா்பாக கல்வித் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் கூறியதாவது:
ஒரு முறை விருது பெற்றவா்களுக்கு மீண்டும் கிடையாது என்ற விதிமுறை அமல்படுத்தப்பட வேண்டும். அலுவலா், ஊழியா் என பணி நிலை அடிப்படையில் தோ்வு செய்வதைக் கைவிட்டு, துறைக்கு ஒருவருக்கு மட்டுமே விருது வழங்க வேண்டும். துறைத் தலைமை அலுவலா்களைப் பொருத்தவரை, விருதுக்குத் தகுதியானவா்களாக இருந்தால் மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஒரு குழு அமைத்து தோ்வு செய்ய வேண்டும்.
பணி நிலையைக் கவனத்தில் கொள்ளாமல், பணித் திறன் அடிப்படையில் துறைக்கு ஒருவா் வீதம் தோ்வு செய்ய வேண்டும். விருது பெறுவோரின் பெயா்ப் பட்டியல், அவா் தோ்வு செய்யப்பட்டதற்கான காரணம், ஆற்றிய பணிகளைக் குறிப்பிட்டு 2 நாள்களுக்கு முன்னதாக பட்டியலை வெளியிட்டு, வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.