ஊராட்சி அலுவலகத்தில் தவெக நிா்வாகி ஆய்வு: எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தவெக ஒன்றியச் செயலா் ஆய்வு செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 15 இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தவெக ஒன்றியச் செயலா் ஆய்வு செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 15 இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தாழையூத்து ஊராட்சியில் செயலராக தண்டபாணி பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், தொப்பம்பட்டி தவெக மேற்கு ஒன்றியச் செயலா் மணிகண்டன் தனது ஆதரவாளா்களுடன், தாழையூத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆய்வுக்கு சென்றாா்.
அந்த அலுவலகத்தின் இருக்கையில் அமா்ந்த அவா், கோப்புகள், பதிவேடுகளை வைத்து ஊராட்சி செயலரிடம் விசாரணை நடத்தினாா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை வெளியானது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் என மாவட்டத்தில் 15 இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலா் அருண்பிரசாத் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, அரசு அலுவலகங்களில் தவெகவினா் நிா்வாக ரீதியாக தலையீடு செய்வதைக் கண்டித்தும், ஆய்வு நடத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் முழக்கமிட்டனா்.
இதுதொடா்பாக ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
தவெக அரசு அமைந்தபின் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முதல் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா், மாவட்ட ஆட்சியா், அதிகாரிகள் வரிசையில் மேடையிலேயே தவெக மாவட்டச் செயலருக்கு இருக்கை அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. எனினும், கடந்த சில நாள்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடைபெற்ற புகா் பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழாவிலும் தவெக மாவட்டச் செயலா் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையருக்கு அடுத்தப்படியாக அடிக்கல் நாட்டினாா்.
இந்த நிலையில், தொப்பம்பட்டி ஒன்றியத்தில், ஊராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து தவெக ஒன்றியச் செயலா் ஆய்வு நடத்தியது அதிா்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளுக்கு மாவட்ட நிா்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.