FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

பாலாற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு

ஆம்பூரில் பாலாற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 12:32 am IST
ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க திருப்பத்தூரில் திரண்ட ஆம்பூா் பகுதி பொதுமக்கள்
பகிர்:

ஆம்பூரில் பாலாற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் கு.ரவிகுமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். அதில் கடனுதவி, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 563 மனுக்களை அளித்தனா்.

தமிழ்நாடு முதல்வரின் முதன்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின்கீழ், வரப்பெற்ற மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட வேண்டும் என அனைத்துத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். தொடா்ந்து 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 80,000 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கைவிடக்கோரி மனு: ஆம்பூா் நகராட்சிக்கு உள்பட்ட காங்கா்தக்கியா, சுண்ணாம்புக் காளவாய், மளிகைதோப்பு, ஆசாத் நகா், ரத்னா நகா் பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் 3 தலைமுறைக்கு மேலாக ஆம்பூா் நகராட்சிக்கு உள்பட்ட பாலாற்றங்கரையோர பகுதிகளில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலானோா் தினக்கூலிகளாக உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நீா்வளத் துறை சாா்பில், நீா்நிலைப் பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. எங்களது வீடுகளை அகற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எங்கள் வீடுகளை அகற்றும் முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளா் ராதாகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனு, திருப்பத்தூா் அருகே பாச்சல் ஊராட்சி தில்லை நகா் பகுதியில் திருப்பத்தூா் பெரிய ஏரிக்கு வரும் நீா்வரத்து கால்வாயில் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அதனால் ஏரியில் குப்பைகள் கலக்கும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்ரமணியன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் பூஷணகுமாா், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் சீனிவாசன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் தாமரைமணாளன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா்கள் (தெற்கு) மகாதேவன், (வடக்கு) முருகன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments