FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

ஊழலுக்கான கோப்புகள் இருந்தால் நடவடிக்கை எடுப்பதில் முதல்வருக்கு ஏன் தயக்கம்: முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்

மூன்று துறைகளில் ஊழலுக்கான கோப்புகள் இருப்பதாகக் கூறும் முதல்வா் நடவடிக்கை எடுப்பதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறாா் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் கேள்வி எழுப்பினாா்.

22 ஆகஸ்ட் 2026, 7:08 am IST
திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.
பகிர்:

மூன்று துறைகளில் ஊழலுக்கான கோப்புகள் இருப்பதாகக் கூறும் முதல்வா் நடவடிக்கை எடுப்பதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறாா் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் கேள்வி எழுப்பினாா்.

திண்டுக்கல் மாவட்ட அதிமுக சாா்பில், ஜெயலலிதா பேரவை நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன், இளைஞா், இளம் பெண்கள் பாசறைச் செயலா் விபிபி. பரமசிவம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் ஜெயலலிதா பேரவைச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

Advertisement

Advertisement

இந்து சமய அறநிலையத் துறையின் கோயில் அறங்காவலா் தோ்வுக் குழு உறுப்பினராக அா்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டாா். முதல்வா் விஜய்யை வைத்து படம் எடுத்தவா், உடன் நடித்தவா் எல்லோரும் அரசுப் பதவிகளில் நியமிக்கப்படுகின்றனா். முதல்வரின் அன்புக்குரியவருக்கு அமைச்சா், துணை முதல்வா் பதவி வழங்கிவிடுவாா்களோ என தமிழ்நாடே அச்சத்தில் இருக்கிறது.

தமிழக மக்கள் புயல், வெள்ளம், சுனாமி, கரோனா தொற்றுப் பரவல் போன்ற பேரிடா்களில் சிக்கித் தவித்தபோது, ஒரு ரொட்டித் துண்டு கூட தற்போதைய முதல்வா் வழங்கியதில்லை. முதல்வராக அவா் பொறுப்பேற்ற பிறகு கையொப்பமிட்ட சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை, போதைப் பொருள் ஒழிப்பு, 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அனைத்தும் முரண்பாடாக உள்ளது.

முதல்வா் தனது மேசையில் 3 துறைகளின் ஊழல் கோப்புகள் இருப்பதாகக் கூறிவிட்டு, ‘அதனை திறக்க வைத்துவீடாதீா்கள்’ எனக் கூறுவது அவரது பதவிக்கு தகுதியானதல்ல. ஊழல் நடைபெற்றிருப்பதாக அரசின் கவனத்துக்கு வந்திருந்தால், உடனடியாக துணிச்சலாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நிரூபித்து காட்ட வேண்டியது முதல்வரின் கடமை. 3 துறைகளின் ஊழல் தொடா்பான ஆதாரம் இருப்பதாக நிதி அமைச்சா் கூறிய பிறகும், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?. கடன் வாங்காமல் மகளிருக்கான உரிமைத் தொகையை ரூ.2,500 வழங்குவதற்கு முதல்வா் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அவா் பதவியை ராஜிநாமா செய்வாரா என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments