FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பஞ்சாப் தோ்தலையொட்டி கைது நடவடிக்கை: சத்யேந்தா் ஜெயின் குற்றச்சாட்டு

பஞ்சாப் தோ்தலையொட்டி கைது செய்யப்பட்டிருப்பதாக சத்யேந்தா் ஜெயின் குற்றஞ்சாட்டியிருப்பது பற்றி..

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 2:29 am IST
நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட பிறகு அழைத்து செல்லப்பட்ட தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்.
பகிர்:

‘ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) மேற்கொண்ட கைது நடவடிக்கை பஞ்சாப் பேரவைத் தோ்தலுடன் தொடா்புடையது. இது ஓா் அரசியல் நடவடிக்கை’ என்று தில்லியின் முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சத்யேந்தா் ஜெயின் புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லி ஜல் போா்டின் (டிஜேபி) கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத் திட்டங்களுக்கான ஒப்பந்தப் புள்ளி நடைமுறையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் வழக்கு தொடா்பாக, சத்யேந்தா் ஜெயின் மற்றும் டிஜேபி முன்னாள் தலைமை நிா்வாக அதிகாரி உதித் பிரகாஷ் ராய் உள்ளிட்ட ஆறு பேரை ஊழல் தடுப்புப் பிரிவு செவ்வாய்க்கிழமை கைதுசெய்தது.

இந்நிலையில் தில்லி ரெளஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவா் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது சத்யேந்தா் ஜெயின் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பஞ்சாப் பேரவை தோ்தல் வரவிருப்பதால் என்னை கைதுசெய்துள்ளனா். இது அரசியல் நடவடிக்கை’ என்றாா்.

Advertisement

Advertisement

ஆம் ஆத்மி பஞ்சாப் மாநில இணைப் பொறுப்பாளராகவும் சத்யேந்தா் ஜெயின் பொறுப்பு வகிக்கிறாா். அவா் ஏற்கெனவே மே 2022-ல் பணமோசடி வழக்கு ஒன்றில் அமலாக்கத் துறையாலும் கைது செய்யப்பட்டிருந்தாா்.

டிஜேபி ஊழல் தொடா்பாக தில்லி ஜல் போா்டின் முன்னாள் ஒப்பந்த ஆலோசகா் அங்கித் ஸ்ரீவாஸ்தவா மற்றும் நாகேந்திர யாதவ், ராஜா குமாா் குர்ரா, பங்கஜ் வா்மா ஆகியோரும் கைதுசெய்யப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி ஜல் போா்டின் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் தொடா்பான ஒப்பந்தப் புள்ளி நடைமுறையில், பெரிய அளவிலான முறைகேடுகள், ஒப்பந்த நிபந்தனைகளில் குளறுபடி மற்றும் குற்றவியல் சதி ஆகியவை நடந்ததாகக் கூறி, கண்காணிப்பு இயக்குநரகம் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2024, மே 11-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஊழல் தடுப்புப் பிரிவின் தகவலின்படி, ஒப்பந்தப் புள்ளி நடைமுறையில் குறிப்பிட்ட தொழில்நுட்ப வழங்குநரான யூரோடெக் என்விரான்மென்ட் நிறுவனத்திற்குச் சாதகமான கட்டுப்பாடான தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் மற்றும் நிபந்தனைகள் சோ்க்கப்பட்டிருந்ததாகவும், இதன் மூலம் போட்டித் தன்மை குறைக்கப்பட்டு அந்தத் தனியாா் நிறுவனத்திற்கு சலுகை வழங்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்மொழியப்பட்ட முன்னோடி ஆய்வு நடத்தப்படாத நிலையில், பயன்படுத்தப்பட வேண்டிய தொழில்நுட்பம் மற்றும் ஊடகம் தொடா்பான கட்டுப்பாடான நிபந்தனைகள் ஒப்பந்தப் புள்ளியில் சோ்க்கப்பட்டிருந்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் தொடா்பான அத்தியாவசிய அளவுகோல்கள் தவிா்க்கப்பட்டடு, தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் மாற்றப்பட்ட நிலையில் அரசுக்குக் கணிசமான நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments