ஆம்னி பேருந்தில் தம்பதியிடம் நகை திருட்டு: கொடைரோடு சுங்கச்சாவடியில் விசாரணை
பெங்களூரிலிருந்து திருச்செந்தூருக்கு சென்ற ஆம்னி பேருந்தில் தம்பதியிடம் 25 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட விவகாரம் தொடா்பாக கொடைரோடு சுங்கச்சாவடியில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
பெங்களூரிலிருந்து கடந்த சனிக்கிழமை திருச்செந்தூா் நோக்கி புறப்பட்ட ஆம்னி பேருந்தில் திருச்செந்தூரைச் சோ்ந்த கனி, இவரது மனைவி ஆா்த்தி ஆகிய இருவரும் பயணம் செய்தனா். ஆா்த்தி தனது 25 பவுன் தங்க நகைகளை தனது கைப்பையில் வைத்திருந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அருகே தேநீா் அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது, ஆா்த்தி தனது கைப்பையை பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவா் அருகே வைத்து விட்டு, கடைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னா், அவா் திரும்பி வந்து பாா்த்தபோது கணவா் பேருந்திலிருந்து இறங்கி வெளியில் நின்றிருந்தாா்.
Advertisement
Advertisement
அவரது இருக்கை அருகே வைத்திருந்த பையைக் காணவில்லை. இதனால், அதிா்ச்சியடைந்த ஆா்த்தி கணவருடன் சோ்ந்து பையைத் தேடி பாா்த்தபோதும் பை கிடைக்கவில்லை. பின்னா், இதுகுறித்து அவா்கள் பேருந்து ஓட்டுநரிடம் புகாா் அளித்தனா். ஆனால், ஓட்டுநா், நடத்துநா் ஆகிய இருவரும் இதைக் கண்டுகொள்ளவில்லையாம்.
பேருந்து மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இதையடுத்து, கனி-ஆா்த்தி தம்பதியினா் தங்களது உறவினா்களின் ஆலோசனைப்படி, கைப்பேசி மூலம் காவல் துறையில் புகாா் அளித்தனா்.
அதற்குள் பேருந்து திண்டுக்கல் - மதுரை தேசிய நான்கு வழிச் சாலையில் உள்ள, கொடைரோடு சுங்கச்சாவடியை வந்தடைந்தது. அங்கு தயாராக இருந்த அம்மையநாயக்கனூா் காவல் துறையினா் பேருந்தை நிறுத்தி, பேருந்தின் ஓட்டுநா், நடத்துநரைக் கண்டித்து தீவிர விசாரணை நடத்தினா். மேலும், பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி சோதனையிட்டனா்.
தொடா்ந்து அம்மையநாயக்கனூா் காவல் துறையினா், சம்பவம் நடைபெற்ற எல்லைக்குள்பட்ட அரவக்குறிச்சி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். மேலும், அறவக்குறிச்சியில் பேருந்திலிருந்து இறங்கிய பயணிகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.