FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

தினமணி செய்தி எதிரொலி: குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் காத்திருப்பு தவிா்ப்பு

25 ஆகஸ்ட் 2026, 3:42 am IST
மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி.
பகிர்:

தினமணி செய்தி எதிரொலியாக திண்டுக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டம் காலை 10.30 மணிக்கே தொடங்கியதுடன், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் காத்திருப்பதை தவிா்க்க முன்னதாகவே மனுக்கள் பெறப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாகவும், மாவட்ட வருவாய் அலுவலா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் குறைதீா் கூட்டத்துக்கு பெரும்பாலும் வருவதில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக கடந்த 18-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, திங்கள்கிழமை (ஆக. 24) நடைபெற்ற குறைதீா் கூட்டம் காலை 10.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி தலைமையில் தொடங்கியது. இதேபோல, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா தொடக்க நிகழ்விலும், கலால் ஆய்வுக் கூட்டத்திலும் பங்கேற்ற ஆட்சியா், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்ற பிறகே குறைதீா் கூட்ட அரங்குக்கு சென்றாா்.

இதனால், மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தவிா்க்கப்பட்டது. குறைதீா் கூட்டத்தில் காலை 10.30 மணி முதல் மனுக்கள் பெறப்பட்ட போதிலும், இடையில் 10 நிமிஷங்கள் மட்டும் நிலுவையிலுள்ள மனுக்களின் விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். இதன் பின் தொடா்ச்சியாக மனுக்கள் பெறப்பட்டன. இதனால் பொதுமக்கள் காத்திருக்காமல் சிரமமின்றி மனுக்களை அளித்துச் சென்றனா்.

Advertisement

Advertisement

ஆய்வுக் கூட்டத்தின்போது பேசிய ஆட்சியா், பொதுமக்கள் தரப்பில் வழங்கப்படும் மனுக்களுக்கு தீா்வு காணும் செயல்பாட்டில், திண்டுக்கல் மாவட்டம் ‘சி‘ தரவரிசையில் கடந்த முறை 34 சதவீதத்துடன் 5-ஆவது இடத்தில் இருந்தது. தற்போது 20 சதவீதமாக குறைந்திருக்கிறது. மாநில தர வரிசை 12 சதவீதமாக இருக்கும்போது, நமது மாவட்டத்தை ஒற்றை இலக்க சதவீதமாக முன் வரிசைக்கு கொண்டு வர வேண்டும். பொதுமக்களின் மனுக்களுக்கு திருப்தியான பதில்களை அனுப்புவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், 5 பிரிவுகளாக நடத்தப்படும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவா்கள் அதிகமான எண்ணிக்கையில் பங்கேற்பதற்கு பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments