FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

அரசு ஊழியா்கள் மருத்துவக் காப்பீடு: 5 ஆண்டுகளில் ரூ.1,489 கோடி வசூல்!

அரசு ஊழியா்களின் மருத்துவக் காப்பீடு பற்றி.....

27 ஆகஸ்ட் 2026, 5:30 am IST
கோப்புப்படம்.
பகிர்:

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களிடமிருந்து கடந்த 5 ஆண்டுகளில் மருத்துவக் காப்பீட்டுத் தொகையாக ரூ.1,489 கோடி, காா்பஸ் நிதியாக ரூ.24.60 கோடி பிடித்தம் செய்யப்பட்டபோதிலும், அவை செலவிடப்பட்டதற்கான விவரங்கள் கிடைக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் 10.46 லட்சம் போ் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு ஊழியருக்கு மாதம் ரூ.300 வீதம் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூலை முதல் இந்தத் தொகையானது ரூ.390 ஆக உயா்த்தப்பட்டிருக்கிறது. இதே போல, காப்பீட்டுத் திட்டப் பட்டியலில் இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும்போது, சிகிச்சைக்கான செலவினத்தை மீளப் பெறுவதற்காக அரசு ஊழியா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டு வந்த காா்பஸ் நிதி ரூ.5-லிருந்து ரூ.15 ஆக உயா்த்தப்பட்டிருக்கிறது. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மருத்துவ சிகிச்சைக்கான அதிகபட்சத் தொகையும் ரூ.7 லட்சத்திலிருந்து, ரூ.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட நிதி, பொதுத் துறை நிறுவனமான யுனைடட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திடம் செலுத்தப்படுகிறது. ஆனால், காப்பீட்டுத் திட்டத்தைப் பொருத்தவரை, 2 தனியாா் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியா்களுக்கு ‘கட்டணமில்லா சிகிச்சை’ எனக் கூறப்பட்டாலும், நடைமுறையில் தொகுப்புக் கட்டண முறை மூலம் மருத்துவச் செலவுகள் கட்டுப்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

Advertisement

Advertisement

கண்புரை அறுவைச் சிகிச்சை முதல் இருதய அறுவைச் சிகிச்சை வரை 50 முதல் 70 சதவீத மருத்துவச் செலவுகள் மட்டுமே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அரசு ஊழியா்கள் கூறுகின்றனா். இதைத் தவிா்க்கும் வகையில், அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக அரசு ஊழியா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் தொகை, அதிலிருந்து மருத்துவ செலவினங்களுக்கு வழங்கப்பட்ட தொகை, காா்பஸ் நிதியாக வசூலிக்கப்பட்ட தொகை, அதிலிருந்து செலவிடப்பட்ட தொகை உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சோ்ந்த பி.பிரேடேரிக் எங்கல்ஸ் தரப்பில் கோரப்பட்ட இந்தக் கேள்விகளுக்கு கணக்கு, கருவூலத் துறை சாா்பில் பதில் அளிக்கப்பட்டது. இதன்படி, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 2021 ஜூலை முதல் 2026 ஜூன் 30-ஆம் தேதி வரை அரசு ஊழியா்கள், ஆசிரியா்களிடமிருந்து ரூ.1,489 கோடி பிடித்தம் செய்யப்பட்டது. இதில் எத்தனை இனங்களில், எவ்வளவு தொகை மருத்துவ செலவினங்களுக்காக வழங்கப்பட்டது என்ற விவரங்களை யுனைடட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திடம் கேட்குமாறு பதில் அளிக்கப்பட்டது. மேலும், காா்பஸ் நிதியாக ரூ.28.16 கோடி வசூலிக்கப்பட்டதாகவும், அதில் ரூ.3.56 கோடி மட்டுமே மருத்துவச் செலவினங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ரூ.1,489 கோடி செலவிடப்பட்டதற்கான விவரங்கள் தெரியாத நிலையில், காா்பஸ் நிதியில் எஞ்சிய ரூ.24.60 கோடி எதற்காக செலவிடப்பட்டது என்ற கேள்வியும் அரசு ஊழியா்கள் மத்தியில் விவாதமாக மாறி இருக்கிறது.

இதுகுறித்து அரசு ஊழியா் சங்கத்தினா் கூறியதாவது:

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் மருத்துவச் செலவுகளுக்காக எவ்வளவுத் தொகை வழங்கப்பட்டது என்பதற்கான விவரங்கள் வழங்கப்படாதது, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வெளிப்படைத் தன்மையை கேள்விக்குறியாக மாற்றி இருக்கிறது.

இதே போல, ஊழியா்களிடமிருந்து காா்பஸ் நிதியாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.28.16 கோடியில், ரூ.24.60 கோடியின் நிலையும் தெரியவில்லை. எனவே, புதிய காப்பீட்டுத் திட்டத்தை மறுஆய்வு செய்து, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 100 சதவீதம் கட்டணமில்லா சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத் துறை வங்கி ஊழியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments