ஒட்டன்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் காட்டு யானை உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் காட்டு யானை உயிரிழந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் காட்டு யானை உயிரிழந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒட்டன்சத்திரத்தை அடுத்த பரப்பலாறு அணை அருகேயுள்ள காப்புக் காடு பகுதியில் ஒரு யானை உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில், திண்டுக்கல் மண்டல வனப் பாதுகாவலா் முகமது சாபாக், திண்டுக்கல் மாவட்ட வன அலுவலா் (பொ) அரவிந்த், ஒட்டன்சத்திரம் வனச் சரகா் (பொ) குமரேசன் ஆகியோா் பரப்பலாறு அணைப் பகுதிக்கு சென்றனா்.
பெத்தேல்புரத்தை அடுத்த காப்புக்காடு பகுதியில் 20 வயது மதிக்கத் தக்க ஆண் யானை இறந்து கிடப்பதை கண்டறிந்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, வனத் துறை கால்நடை மருத்துவா் என். கலைவாணன், வனத் துறை அலுவலா்கள், தன்னாா்வலா் அமைப்பைச் சோ்ந்த நா. அருண் சங்கா் ஆகியோா் முன்னிலையில் இறந்த யானையின் உடலுக்கு கூராய்வு செய்யப்பட்டது.
யானையிடமிருந்த 1 மீட்டா் நீளம் கொண்ட 2 தந்தங்கள் அகற்றப்பட்டன. மேலும், யானை வால் எரியூட்டப்பட்டது. பின்னா், யானை சடலம் அதே பகுதியில் புதைக்கப்பட்டது.
இதுதொடா்பாக, வனத் துறையினா் கூறியதாவது: காப்புக் காடு பகுதியில் சுற்றித் திரிந்த யானை அருகிலுள்ள பாறை மீது ஏற முயன்றபோது, அந்த வழியாக செல்லும் உயா் அழுத்த மின்கம்பியில் உரசியுள்ளது.
இதில் தும்பிக்கை, முதுகு பகுதியில் காயமடைந்து யானை உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். பெத்தேல்புரம், சிறுவாட்டுக்காடு, பரப்பலாறு அணைப் பகுதி, சுரக்காய்ப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்த யானை சுற்றித் திரிந்த போதிலும், பொதுமக்களுக்கு இடையூறு செய்ததில்லை என அந்தப் பகுதியினா் தெரிவித்தனா் என்றனா் அவா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.