FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: முன்னாள் இணை ஆணையரிடம் விசாரணை

Updated On : 22 ஜூலை 2026, 3:49 am IST
பழனி கோயில் நிலம் தொடா்பான ஆவணங்களை சிபிசிஐடி அலுவலகத்துக்கு எடுத்து வந்த கோயில் ஊழியா்கள்.
பகிர்:

பழனி கோயில் நிலம் முறைகேடாக தனி நபா்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக தண்டாயுதபாணி சுவாமி கோயில் முன்னாள் இணை ஆணையரிடம் சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலம் தற்போது பழனி கோயில் நிா்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வாகன நிறுத்துமிடமாகப் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி, போலி ஆவணங்கள் மூலம் ரூ. 2 கோடிக்கு இந்த நிலம் தனி நபா்களுக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக பழனி கோயில் கண்காணிப்பாளா் (நிலங்கள் பிரிவு) ச. முருகானந்தம் கடந்த 6-ஆம் தேதி புகாா் அளித்தாா். இதன்பேரில், பழனி அடிவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், போலி அறக்கட்டளை நிா்வாகி முருகதாஸ் சுவாமிகள், நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளத்துரை ஆகியோா் மீது 336 (3), 340 (2), 318 (4), 49, 61 (2) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் கடந்த 16-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினா்.

சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் சஜிதா தலைமையில் பழனி கோயில் கண்காணிப்பாளா்கள் ச. முருகானந்தம், சிவனேசன், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சின்னச்சாமி, ஓய்வு பெற்ற வட்டாட்சியா் மாரியப்பன், பழனி சாா் பதிவாளா் அலுவலகம், சாட்சி கையொப்பமிட்ட திமுக முன்னாள் செயலா் லட்சுமணன், பொன்னாபுரத்தைச் சோ்ந்த மயில்சாமி, ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோரது வீடுகள், தொடா்புடைய இடங்களில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை நடத்தி, விசாரணை மேற்கொண்டனா்.

பழனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவுத் துறை உயரதிகாரிகள் கொண்ட குழுவினரும், சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் சஜிதா தலைமையிலான போலீஸாரும் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

முன்னாள் இணை ஆணையா்:

இந்த நிலையில், திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் முன்னாள் இணை ஆணையா் மாரிமுத்து செவ்வாய்க்கிழமை முன்னிலையாகி விளக்கம் அளித்தாா்.

பழனி கோயில் கண்காணிப்பாளா் சிவனேசன், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சின்னச்சாமி, ஓய்வு பெற்ற வட்டாட்சியா் மாரியப்பன் ஆகியோரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக முன்னிலையாகினா். சுமாா் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், உணவு இடைவேளையின்போது முன்னாள் இணை ஆணையா் மாரிமுத்து வெளியே வந்தாா்.

இந்த விசாரணையில், தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் தொடா்பான ஆவணங்கள் குறித்து சிபிசிஐடி போலீஸாா் விவரங்களை சேகரித்ததாகக் கூறப்படுகிறது.

சா்ச்சைக்குரிய 1.40 ஏக்கா் நிலம், கடந்த 1880-களின் பிற்பகுதியில் பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மணியக்காரா் என்பவா் பழனி தண்டபாணி சுவாமிகள் என்பவருக்கு தானமாகக் கொடுத்தாா். இதற்கு முறையான ஆவணங்கள் பதிவு செய்யப்படாத நிலையில், வாய்மொழி உத்தரவின்படி தண்டபாணி சுவாமிகள் மறைவுக்குப் பிறகு வந்த மடத்தின் நிா்வாகிகள் நிலத்தை அனுபவித்து வந்தனா்.

தற்போது, 1.40 ஏக்கா் நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதன் மூலம், இந்த நிலம் தொடா்பான அனைத்து பழைய ஆவணங்களையும் சேகரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலம் தொடா்பாக கோயில் நிா்வாகத்திடமிருந்த சில ஆவணங்களை முன்னாள் இணை ஆணையா் மாரிமுத்து சிபிசிஐடி போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்த பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் முன்னாள் இணை ஆணையா் மாரிமுத்து, விசாரணை முடிந்து மாலை 6 மணிக்கு வெளியே வந்தாா்.

திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்துக்கு விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை வந்த பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் முன்னாள் இணை ஆணையா் மாரிமுத்து.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments