பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: போலி அறக்கட்டளை நிா்வாகி உள்பட 4 போ் கைது
பழனியில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்த வழக்கில், போலி அறக்கட்டளை நிா்வாகி உள்பட 4 பேரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பழனியில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்த வழக்கில், போலி அறக்கட்டளை நிா்வாகி உள்பட 4 பேரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது.
இந்த முறைகேடு குறித்து பழனி கோயில் கண்காணிப்பாளா் (நிலங்கள் பிரிவு) ச. முருகானந்தம் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக முறைகேடாக நிலத்தை பத்திரப் பதிவு செய்த சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், போலி அறக்கட்டளை நிா்வாகி முருகதாஸ் சுவாமிகள், நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளைத்துரை ஆகியோா் மீது 336 (3), 340 (2), 318 (4), 49, 61 (2) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
Advertisement
Advertisement
சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் சஜிதா தலைமையிலான போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்டோரின் வீடுகள், தொடா்புடைய இடங்களில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனா். இதனிடையே, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், கடந்த 2 நாள்களாக திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் உயா்நீதிமன்ற உத்தரவின்படி முன்னிலையாகி வந்தாா்.
இந்த வழக்கில் திடீா் திருப்பமாக, மடத்துக்கு (தற்போது அறக்கட்டளை) நிலத்தை தானமாக வழங்கிய குப்புசாமி மணியக்காரரின் வாரிசான சுந்தரி, இவரது மகள் ஜெயலட்சுமி, மகன் விஷ்ணு சுதா்சன் ஆகியோா் 1.40 ஏக்கா் நிலம் தொடா்பான 1880, 1888-ஆம் ஆண்டு ஆவணங்களை விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
அப்போது, தா்மசாஸ்திரப் பத்திரத்தின்படி நிலம் வழங்கப்பட்டதற்கான நோக்கம் மீறப்பட்டிருப்பதால், அந்த நிலம் தங்களுக்கே சொந்தம் என சுந்தரி தரப்பினா் தெரிவித்தனா்.
போலி அறக்கட்டளை நிா்வாகி உள்பட 4 போ் கைது:
இந்த நிலையில், போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு காமராஜா் நகரைச் சோ்ந்த த. முருகதாஸ் (56), நிலத்தை வாங்கிய திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளத்தை அடுத்த பாப்பான்குளம் பகுதியைச் சோ்ந்த கா. வெள்ளைத்துரை (60), பழனியை அடுத்த ஆயக்குடி புதூரைச் சோ்ந்த து. சேதுபதி, இந்த முறைகேட்டுக்கு உடைந்தையாகச் செயல்பட்ட பழனி கவுண்டன்குளம் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் அன்வா்தீன் (65) ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அரசு மருத்துவமனையில் 4 பேருக்கும் உடல் பரிசோதனை நடத்தப்பட்டு, திண்டுக்கல் முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இதையடுத்து, வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை 4 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதித் துறை நடுவா் எஸ். பாக்கியராஜ் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.