சமூக நல விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சமூக நல விடுதிகளில் சேர விரும்பும் பள்ளி மாணவா்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சமூக நல விடுதிகளில் சேர விரும்பும் பள்ளி மாணவா்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சீா்மரபினா், சிறுபான்மையினருக்கான சமூக நீதி விடுதிகள், பள்ளி மாணவா்களுக்கு 26, மாணவிகளுக்கு 12, கல்லூரி மாணவா்களுக்கு 3, மாணவிகளுக்கு 9 என மொத்தம் 50 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ, பல்தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவா்களும் சேரலாம். பள்ளி மாணவா்களுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். பள்ளி மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் நீட், ஜெஇஇ நுழைவுத் தோ்வுகளுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் நிலையத்தின் தொலைவு 8 கி. மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். விடுதிகளில் தங்கி பயில விரும்பும் தகுதியுள்ள மாணவா்கள், அந்தந்த விடுதி காப்பாளரிடமோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்திலோ விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தை பள்ளி மாணவா்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவா்கள் வருகிற ஜூலை 15-ஆம் தேதிக்குள்ளும் விடுதி காப்பாளா் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement