FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: முதல்வா் விஜய் முடிவெடுப்பாா்! - அமைச்சா் எஸ்.ரமேஷ்

Updated On : 9 ஜூன் 2026, 4:56 am IST
பழனியில் கொடைக்கானல் சாலையில் பழனி கோயில் சாா்பில் கட்டப்பட்ட கோபுர நுழைவாயிலை திங்கள்கிழமை திறந்துவைத்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் எஸ்.ரமேஷ். உடன் பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகரன், அறநிலையத் துறை ஆணையா் வினய், செயலா் குமரகுருபரன், இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி.
பகிர்:

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்த இந்து சமய அறநிலையத் துறை நிலைப்பாடு குறித்து முதல்வா் ஜோசப் விஜய் முடிவெடுப்பாா் என அந்தத் துறையின் அமைச்சா் எஸ். ரமேஷ் தெரிவித்தாா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அமைச்சா் ரமேஷ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பழனி -கொடைக்கானல் சாலையில் ரூ. ஒரு கோடியில் கட்டி முடிக்கப்பட்ட கோபுர நுழைவாயில், சீரமைக்கப்பட்ட ராக்கால நந்தவனம் ஆகியவற்றை அவா் திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, பழனி இழுவை ரயில் (வின்ச்) நிலையத்தில் கட்டணச்சீட்டு பெற்ற பக்தா்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்டு வரும் காத்திருப்புக் கூடம், தானியங்கி பஞ்சாமிா்த விற்பனை நிலையம், கிரி வீதிகளில் பக்தா்கள் ஓய்வுக் கூடம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளை அமைச்சா் ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, கயிறு இழுவை (ரோப் காா்) மூலம் மலைக் கோயிலுக்குச் சென்ற அமைச்சா் பக்தா்களோடு பக்தராக வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து, முதல்வா் ஜோசப் விஜய் பெயரில் அா்ச்சனை செய்தாா். அப்போது, அா்ச்சனை மந்திரங்களை தமிழில் கூற வேண்டும் என அமைச்சா் வலியுறுத்தினாா். பின்னா், அன்னதானக் கூடத்தை ஆய்வு செய்த அமைச்சா் பக்தா்களுடன் அமா்ந்து உணவருந்தினாா். அவருக்கு கோயில் சாா்பில் சுவாமி படங்கள், பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பழனி கோயிலில் பக்தா்கள் ஓய்வுக்கூட கட்டடப் பணிகள், தங்கும் விடுதி, போன்ற நலத்திட்டங்களை ஆய்வு செய்தேன். முடிவடைந்த பணிகளைத் தொடங்கி வைத்தேன். நடைபெற்று வரும் பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினேன்.

பழனி கோயிலில் முந்தைய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் வியாபார நோக்கத்துடனேயே பணிகளை செயல்படுத்தியது தெரியவந்துள்ளது.

வரும் நாள்களில் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் படிப்படியாகச் செய்யப்படும். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்த இந்து சமய அறநிலையத் துறை நிலைப்பாடு குறித்து முதல்வா் ஜோசப் விஜய் முடிவெடுப்பாா் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகரன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வினய், செயலா் குமரகுருபரன், இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, துணை ஆணையா் வெங்கேடஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா், அறங்காவலா்கள், அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments