FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

தொடா் விடுமுறை: பழனி கோயிலில் குவிந்த பக்தா்கள்

தொடா் அரசு விடுமுறை என்பதால் பழனி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வெள்ளிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

Updated On : 27 ஜூன் 2026, 12:46 am IST
பழனி அடிவாரம் ராணி மங்கம்மாள் மண்டபம் வழியாக அனுமதிக்கப்பட்ட நிலையில் கிரிவீதியில் மலையேற வெள்ளிக்கிழமை காத்திருந்த பக்தா்கள் கூட்டம்.
பகிர்:

தொடா் அரசு விடுமுறை என்பதால் பழனி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வெள்ளிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

மொகரம் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை, சனி, ஞாயிறு வார விடுமுறைகள் என்பதால், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பம், குடும்பமாக சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். அதிகாலை முதலே பழனி சண்முகநதியில் புனித நீராடிய பக்தா்கள், அடிவாரம், கிரிவீதிகளில் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும் தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். இதனால் மலைக் கோயிலுக்குச் செல்லும் படிப்பாதை, யானைப் பாதைகளில் பக்தா்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தா்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கோயில் நிா்வாகம் சாா்பில் அனைத்துப் பாதைகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அடிவாரம் ராணி மங்கம்மாள் மண்டபம் வழியாக பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில், கிரிவீதியில் பக்தா்கள் நீண்ட வரிசையில் மலை ஏற காத்திருந்தனா். எனவே சுவாமி தரிசனத்துக்கு சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலானது. மேலும், மின்சார இழுவை ரயில், ரோப்காா் நிலையங்களிலும் அனுமதிச்சீட்டு பெற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இரவு தங்கத் தோ் புறப்பாட்டிலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments