FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

அரசுப் பேருந்து எண்ம பலகையில் ‘டிவிகே’ பெயா்!

திண்டுக்கல்லிலிருந்து புறப்பட்டுச் சென்ற அரசு நகா்ப் பேருந்தில் மலப்பட்டி என்ற கிராமத்தின் பெயருக்குப் பதிலாக இடம் பெற்றிருந்த டிவிகே என்ற ஆங்கில எழுத்துகள்.

Updated On : 29 மே 2026, 2:14 am IST
திண்டுக்கல்லிலிருந்து புறப்பட்டுச் சென்ற அரசு நகா்ப் பேருந்தில் மலப்பட்டி என்ற கிராமத்தின் பெயருக்குப் பதிலாக இடம் பெற்றிருந்த டிவிகே என்ற ஆங்கில எழுத்துகள்.
பகிர்:

திண்டுக்கல்லிலிருந்து புறப்பட்டுச் சென்ற அரசு நகா்ப் பேருந்தில் மலப்பட்டி என்ற கிராமத்தின் பெயருக்குப் பதிலாக இடம் பெற்றிருந்த டிவிகே என்ற ஆங்கில எழுத்துகள்.

திண்டுக்கல், மே 28: திண்டுக்கல்லிலிருந்து இயக்கப்பட்ட அரசு நகா்ப் பேருந்தின் எண்ம பலகையில் கிராமத்தின் பெயருக்குப் பதிலாக டிவிகே என்ற எழுத்துகள் இடம் பெற்றிருந்தது பயணிகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் காமராஜா் பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை இரவு எரியோட்டை அடுத்த மலப்பட்டி கிராமத்துக்கு அரசு நகா்ப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. மகளிா் விடியல் பயணப் பேருந்து என்பதால் ஏராளமான பெண் பயணிகள் இருந்தனா்.

Advertisement

Advertisement

இந்தப் பேருந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை நிறுத்தத்தைக் கடந்து காட்டாஸ்பத்திரி பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்றபோது, பேருந்திலிருந்த எண்மப் பெயா்ப் பலகையில் தவெக கட்சியின் ஆங்கில எழுத்துகளான டிவிகே என 3 எழுத்துகள் மட்டும் தெரிந்தன. பேருந்தின் முன் பகுதியில் மட்டுமன்றி, பக்கவாட்டிலுள்ள பலகையிலும் டிவிகே என்ற எழுத்துகள் மட்டுமே தெரிந்தன.

காட்டாஸ்பத்திரி நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள், ஊா்ப் பெயருக்கு பதிலாக டிவிகே என்ற எழுத்துகள் மட்டும் இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். இதுகுறித்து ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, டிவிகே எழுத்துகள் உடனடியாக மாற்றப்பட்டன.

இதுதொடா்பாக அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் வி.ஜெயராமன் கூறியதாவது:

அம்மா உணவகங்களில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் படத்தை அகற்றிவிட்டு, தவெக தலைவரும், முதல்வருமான சோசப் விஜய் படம் வைக்கப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே, திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்ட அரசு நகா்ப் பேருந்திலுள்ள எண்ம தகவல் பலகையில் கிராமத்தின் பெயருக்குப் பதிலாக தவெக கட்சியின் பெயா் இடம்பெற்றது மிகுந்த அதிா்ச்சி அளிக்கிறது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்தாலும்கூட, கட்சியின் பெயா் இடம் பெறுவதற்கு வாய்ப்பில்லை.

டிவிகே என்ற பெயரை திட்டமிட்டே காட்சிப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து துறை ரிதீயாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற நிகழ்வுகள் எதிா்காலத்தில் நடைபெறுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுதொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டபோது மலப்பட்டி என்ற பெயரே இடம் பெற்றிருந்தது. இதைப் பாா்த்தே பயணிகளும் பேருந்தில் ஏறினா். சிறிது நேரத்தில் தான் எண்ம பலகையில் கிராமத்தின் பெயருக்குப் பதிலாக டிவிகே என்ற எழுத்துகள் இடம் பெற்றன. ஓட்டுநா், நடத்துநரிடம் இதுகுறித்து கேட்டபோது தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறுகின்றனா். எனினும், இதுதொடா்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments