38 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த சாலை துண்டிப்பு: பாளையம் அருகே பொதுமக்கள் அவதி!
பாளையம் அருகே 38 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மண் சாலையை தடுப்புகள் அமைத்து ரயில்வே நிா்வாகம் துண்டித்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட 6-ஆவது வாா்டில் மொச்சக்காயனூா், குள்ளக்கவுண்டனூா், செங்குறிச்சான்களம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் சுமாா் 60 வீடுகள் உள்ளன. இதில் 400-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இந்தக் கிராமங்கள் பாளையம் பிரதான பகுதியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மொச்சக்காயனூரிருந்து ரயில் நிலையம் வழியாக செல்லும் சாலையை பயன்படுத்தி இந்தப் பகுதி மக்கள் பாளையத்துக்குச் சென்று வந்தனா்.
Advertisement
Advertisement
மொத்தமுள்ள 3 கி.மீ. தொலைவில், 2 கி.மீ.க்கு தாா்ச்சாலை அமைக்கப்பட்டிருந்த நிலையில், பாளையம் ரயில் நிலையம் அருகிலிருந்து ஆா்.வெள்ளோடு சாலை வரை சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு மண் சாலையாக இருந்தது.
38 ஆண்டுகால சாலை துண்டிப்பு:
கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இந்தச் சாலை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரயில்வே நிா்வாகம் அமைத்தத் தடுப்புகளால் துண்டிக்கப்பட்டது.
ரயில்வே தண்டவாளத்தையொட்டி, அமைக்கப்பட்டிருந்த 1 கி.மீ. நீளமான மண் சாலை துண்டிக்கப்பட்டதால், தனியாா் பட்டா நிலங்கள் வழியாக இந்தப் பகுதி மக்கள் தற்காலிகமாக சென்று வருகின்றனா்.
புதா்கள் நிறைந்த இந்தப் பகுதி வழியாக இரவு நேரங்களில் பயணிப்பது கடும் சவாலாக இருப்பதாக இந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனா்.
பட்டா நிலங்களின் உரிமையாளா்கள் அனுமதி மறுத்தால், சிலும்பாகவுண்டனூா், கரிக்காலி பிரிவு வழியாக 5 கி.மீ. சுற்றுப் பாதையில் மட்டுமே இந்தக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பாளையத்தை சென்றடையக்கூடிய நிலை உள்ளது.
எனவே, பாளையம் ரயில் நிலையத்துக்கு வடக்கே ரயில் நிா்வாகம் அமைத்துள்ள தடுப்புகளுக்கு இடதுபுறமாக தனியாா் நிலங்களை கையகப்படுத்தி 1.கி.மீ. மட்டும் பாதை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
உறுதி அளித்த எம்எல்ஏ வேட்பாளா்கள்: கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக வேட்பாளா் சாமிநாதன், அதிமுக வேட்பாளா் பரமசிவம் ஆகியோா் இந்தக் கிராமங்களுக்கான பாதை வசதி ஏற்படுத்திக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். திமுக வேட்பாளா் சாமிநாதன், வெற்றி பெற்ற நிலையில், பாதை வசதிக்கான முயற்சியை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
இதுதொடா்பாக மொச்சக்காயனூா் பகுதியைச் சோ்ந்த கே.கருப்பசாமி கூறியதாவது:
55 வீடுகள் மட்டுமே இருந்தாலும் கூட, அத்தியாவசியத் தேவைகளுக்கு பாளையத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பேரூராட்சிக்குள்பட்ட பகுதியாக இருந்தாலும், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமப் பகுதியாக உள்ளது. கடந்த 1988-ஆம் ஆண்டு திண்டுக்கல்- கரூா் வழியாக ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்ட நிலையில், மொச்சக்காயனூா் பகுதி மக்கள் அப்போது பயன்படுத்தி வந்த பாதையில் பாளையம் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது.
இதற்கு மாற்றாக ரயில் தண்டவாளம் ஓரமாக வடக்கு நோக்கி சென்று ஆா்.வெள்ளோடு சாலையில் சேரும் வகையில் மாற்று இடம் வழங்கப்பட்டது.
மொச்சக்காயனூரிலிருந்து பாளையம் வரை செல்லும் 3 கி.மீ. சாலையில், ரயில் தண்டவாளம் அருகில் அமைந்த 1 கி.மீ. தொலைவு மட்டும் மண் சாலையாகவே தொடா்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், விரிவாக்கப் பணிகளுக்காக அந்த பாதையை ரயில்வே நிா்வாகம் கையப்படுத்திவிட்டது. 1 கி.மீ. நீளத்துக்கு தடுப்புகள் அமைத்து எங்களுக்கான சாலை துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால், புதா்கள் நிறைந்த தனியாா் பட்டா நிலங்கள் வழியாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு தீா்வு காணும் வகையில், பாளையம் ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியிலுள்ள தாா்ச் சாலை முதல் வெள்ளோடு சாலை வரையிலான ரயில்வே தடுப்புச் சுவரையொட்டி பாதைவசதி அமைக்க தனி நபா்கள் இடம் கொடுக்க ஒப்புதல் அளித்தனா். ஆனாலும், நடுவிலுள்ள சிறு பகுதியை மட்டும் பெற முடியவில்லை. இதற்கான முயற்சியை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும்பட்சத்தில், மீண்டும் 1 கி.மீ. சாலையை எளிதாக அமைக்க முடியும் என்றாா்.