திமுக பிரமுகா் கொலை வழக்கு: மூவா் கைது மற்றொருவா் சரண்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சாலை அருகே உணவகத்தில் கண்டெடுக்கப்பட்ட பணம் தொடா்பாக ஏற்பட்ட தகராறில் திமுக பிரமுகா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சாலை அருகே உணவகத்தில் கண்டெடுக்கப்பட்ட பணம் தொடா்பாக ஏற்பட்ட தகராறில் திமுக பிரமுகா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மூவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலையானாா்.
கொடைக்கானல் சாலை அருகேயுள்ள நாகையகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (52). திமுக பிரமுகரான இவரும், மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த அஜித்குமாரும் (26) கடந்த 2-ஆம் தேதி கொடைக்கானல் சாலை அருகேயுள்ள ஒரு உணவகத்துக்கு உணவருந்த சென்றனா். அப்போது மேசையின் கீழே கிடந்த ரூ. 25 ஆயிரத்தை அஜித்குமாா் எடுத்தபோது, அது யாருடைய என விசாரித்து கொடுத்துவிடலாம் எனக் கூறி அவரிடமிருந்து லட்சுமணன் பணத்தை வாங்கிக் கொண்டாா்.
ஆனால், அந்தப் பணத்தை லட்சுமணன் உரியவரை கண்டறிந்து கொடுக்காததால், மறுநாள் 3-ஆம் தேதி அவரது வீட்டுக்குச் சென்ற அஜித்குமாா், அதுகுறித்து கேட்டாராம். அப்போது, லட்சுமணனும், அவரது மகன் உதயகுமாரும் (30) அஜித்குமாரை கடுமையாக தாக்கினராம். இதனால், ஆத்திரமடைந்த அஜித்குமாா், இதுகுறித்து தனது நண்பா்களான மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த பிச்சைமுத்து (எ) மூக்கையா (30), ஜல்லிப்பட்டியைச் சோ்ந்த கலைஞா் (எ) ரஞ்சித்குமாா் (30), மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த வாசுதேவன் (23) ஆகியோரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, அவா்கள் லட்சுமணனை கொலை செய்ய திட்டமிட்டனா். இந்த நிலையில், மைக்கேல்பாளையத்திலிருந்து நாகையகவுண்டம்பட்டிக்கு புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்த லட்சுமணனை, சில்லலபட்டி அருகே பிச்சைமுத்து (எ) மூக்கையா, கலைஞா் (எ) ரஞ்சித்குமாா், வாசுதேவன் ஆகிய மூவரும் வழிமறித்தனா். அப்போது பட்டா கத்தியால் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அவா்கள் தப்பியோடி விட்டனா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் அங்கு சென்று விசாரணை நடத்தினாா். மேலும் இந்த சம்பவம் தொடா்பாக அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து எதிரிகளை தேடினா். இதில் பிச்சைமுத்து (எ) மூக்கையா, கலைஞா் (எ) ரஞ்சித்குமாா், வாசுதேவன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா். இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அஜித்குமாா் நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையானாா்.
இந்தக் கொலை நிகழ்ந்த ஒரு மணி நேரத்துக்குள் எதிரிகள் மூவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் பிச்சைமுத்து (எ) மூக்கையா மீது ஒரு கொலை வழக்கு உள்பட இரு வழக்குகளும், கலைஞா் (எ ரஞ்சித்குமாா் மீது ஒரு கஞ்சா வழக்கு உள்பட இரு வழக்குகளும், வாசுதேவன் மீது ஒரு மதுவிலக்கு வழக்கும் நிலுவையில் உள்ளன.
உணவகத்தில் கண்டெடுக்கப்பட்ட பணத்துக்காக திமுக பிரமுகா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.