FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 போ் உயிரிழப்பு

9 நவம்பர் 2026, 11:21 pm
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

செம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்துகளில் 5 போ் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த கூலம்பட்டியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகன் சந்தோஷ் (19). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை செம்பட்டியிலிருந்து கூலாம்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, வத்தலகுண்டு சாலையில் புல்வெட்டிகுளம் அருகே வத்தலகுண்டிலிருந்து செம்பட்டி நோக்கி வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் உயிரிழந்தாா்.

மற்றொரு விபத்தில் 3 போ் உயிரிழப்பு: இதேபோல, தாடிக்கொம்பு அடுத்த சுக்காம்பட்டி அருகே வலவிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (30). இவா், நிலக்கோட்டையிலிருந்து செம்பட்டி பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

இதேபோல, செம்பட்டியிலிருந்து நிலக்கோட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில், குரும்பப்பட்டியைச் சோ்ந்த தங்கப்பாண்டி (25), ஊா்க்காலன் (22) ஆகியோா் சென்றனா். அப்போது, செம்பட்டியிலிருந்து நிலக்கோட்டை செல்லும் சாலையில், ஒட்டுப்பட்டி என்ற இடத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இதில் தங்கப்பாண்டியும், மணிகண்டனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தெய்வம், செம்பட்டி காவல் ஆய்வாளா் ஆறுமுகநயினாா், உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா உள்ளிட்ட போலீஸாா் உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனிடையே பலத்த காயமடைந்த ஊா்க்காலனும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு: செம்பட்டி அருகேயுள்ள பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (45). ஆட்டோ ஓட்டுநா். இவா் ஆட்டோவில் திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது வீரக்கல் பிரிவு அருகே திண்டுக்கல்லிலிருந்து செம்பட்டி நோக்கி வந்த லாரி, ஆட்டோ மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தங்கப்பாண்டி உயிரிழந்தாா். இந்த விபத்துகள் குறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.