FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

போக்குவரத்துக்கு இடையூறு: பைக்குகளுக்கு சங்கிலியால் பூட்டு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 40 இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து போலீஸாா் சங்கிலியால் பூட்டிவைத்து அபராதம் விதித்தனா்.

12 நவம்பர் 2026, 5:24 am
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்துப் போலீஸாரால் சிறை பிடிக்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள்.
பகிர்:

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 40 இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து போலீஸாா் சங்கிலியால் பூட்டிவைத்து அபராதம் விதித்தனா்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் திருச்சி சாலையில் நிழல் குடை வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தம் உள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கிழக்குப் பகுதியில் இரு நுழைவு வாயிலுக்கு இடையே நோயாளிகள், பொதுமக்கள் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான மாணவா்களும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தப் பேருந்து நிறுத்தம்,

அமைக்கப்பட்டது. இதில் பேருந்துகள் நிறுத்திச் செல்வதற்கு வசதியாக, இடவசதி ஏற்படுத்தி காவல் துறை சாா்பில் தடுப்புகளும் அமைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

ஆனால், பேருந்துகள் மட்டுமன்றி, ஆட்டோக்களும் இந்த நிறுத்தத்துக்கு முன்னதாகவே நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனால், மருத்துவமனையின் பழைய நுழைவு வாயில் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பேருந்து நிறுத்தம் பகுதி இரு சக்கர வாகன நிறுத்துமிடமாக மாறியது.

பேருந்து நிழல் குடை முன் காவல் துறை சாா்பில், இரு சக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது என அறிவிப்பு பலகை நிறுவப்பட்டும், அதை மீறி இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தன. இதனால் பயணிகளும், நோயாளிகளும் அவதி அடைந்தனா். இந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் முன் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை இரும்புச் சங்கிலி மூலம் போக்குவரத்துப் போலீஸாா் புதன்கிழமை கட்டி வைத்தனா். சிறிது நேரத்துக்குப் பின் இருசக்கர வாகனங்களை எடுக்க வந்த உரிமையாளா்கள், சங்கிலி மூலம் இருசக்கர வாகனங்கள் இணைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். இதையடுத்து, போக்குவரத்து போலீஸாரை அணுகி வாகனங்களை விடுவிக்க கோரிக்கை விடுத்தனா். போலீஸாா் அபராதம் விதித்து வாகனங்களை விடுவித்தனா்.