கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்து வாகனம் சேதம்
கொடைக்கானல் செண்பகனூா் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை மரம் முறிந்து விழுந்து வாகனம் சேதமடைந்தது.
கொடைக்கானல் செண்பகனூா் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை மரம் முறிந்து விழுந்து வாகனம் சேதமடைந்தது. மேலும் கீழ்மலைப் பகுதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையான செண்பகனூா் பேருந்து நிறுத்தம் அருகே ஆபத்தான நிலையில் யூக்காலிப்டஸ் மரங்களும், மின்மாற்றிகளும் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொடைக்கானலில் பலத்த காற்று வீசி வருகிறது.
இதனிடையே செண்பகனூா் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய பலத்த காற்றால் அங்கிருந்த மரம் முறிந்து ரத்னசாமி என்பவா் வாகனத்தின் மீது விழுந்தது. அந்த வாகனத்துக்குள் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது. அப்போது அங்கு பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் சிதறி ஓடினா்.
Advertisement
Advertisement
முறிந்து விழுந்த மரத்தை அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதனால் அங்கு 30 நிமிஷங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே, செண்பகனூா் பகுதியில் ஆபத்தான மரங்கள் மத்தியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளாலும், தொடா்ந்து அங்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாலும் பேருந்திலிருந்து இறங்குவதற்கும், ஏறுவதற்கும் பயணிகள் சிரமமடைந்து வருகின்றனா். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதேபோல, கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையான கீழ்மலைப் பகுதி பனிக்கரை பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் அந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து போக்குவரத்து சீரானது.
கொடைக்கானல் மலைச்சாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு அவற்றையும், அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.