நலவாரிய உறுப்பினருக்கு விண்ணப்பித்த நாளில் இருந்து ஓய்வூதியம்
வீட்டுப் பணியாளர் நலவாரிய உறுப்பினருக்கு, விண்ணப்பித்த நாளில் இருந்து தொழிலாளர் நலத்துறையால் நிலுவைத் தொகையுடன் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுப் பணியாளர் நலவாரிய உறுப்பினருக்கு, விண்ணப்பித்த நாளில் இருந்து தொழிலாளர் நலத்துறையால் நிலுவைத் தொகையுடன் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை கோ.புதூரைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர் நலவாரிய உறுப்பினர் அ.காந்தி, ஓய்வூதியம் கோரி 2015 ஜூலை 20 ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் இருந்து வருவாய்த்துறைக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் பெறப்பட்டது.
சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் அலுவலரால் 2017 செப்டம்பர் 14 ஆம் தேதி, அவருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தான் ஓய்வூதிய விண்ணப்பம் சமர்ப்பித்த நாளில் இருந்து ஓய்வூதியம் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் காந்திக்கு, விண்ணப்பம் சமர்ப்பித்த நாளில் இருந்து ஓய்வூதியம் வழங்கவும், நிலுவைத் தொகையை 6 வாரங்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டது.
இதன்படி, அவருக்கு ஓய்வூதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்குவதற்கான உத்தரவை தொழிலாளர் துறை உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஜெ.காளிதாஸ் செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளார்.
அதில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி, மனுதாரர் காந்தி ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்த நாள் முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.25 ஆயிரத்து 387-ஐ வழங்க தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலவாரியச் செயலர் அனுமதித்துள்ளார்.
அதன்படி, மனுதாரருக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.