FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

சிலை திருட்டு வழக்கில் மும்பையைச் சேர்ந்த இருவரைக் கைது செய்ய தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம் அருகே நடைபெற்ற சிலை திருட்டு வழக்கில் மும்பையைச் சேர்ந்த இருவரைக் கைது செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 7 ஜூன் 2018, 8:16 am IST
பகிர்:

விழுப்புரம் அருகே நடைபெற்ற சிலை திருட்டு வழக்கில் மும்பையைச் சேர்ந்த இருவரைக் கைது செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
  மும்பை அந்தேரி மேற்கு பகுதியைச் சேர்ந்த வல்லப பிரகாஷ் மற்றும் ஆதித்ய குமார்  ஷ்ரேஷ்டா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 
அவர்களது மனு  விவரம்:
 விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வீரசோழபுரம் கிராமத்தில் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இருந்த நடராஜர் மற்றும் பல சிலைகள் சமீபத்தில் திருடப்பட்டன. 
இதுதொடர்பாக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீஸார் எங்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்தச் சிலைகள் சில அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
 இந்தச் சிலைகள் கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திரகபூர் என்பவர் கைது செய்யப்பட்டார். இதில் அவருக்கு நாங்கள் உதவியாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம். எனவே எங்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
 இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி, இருவர் மீதும் எத்தனை வழக்குகள் உள்ளன, எத்தனை வழக்குகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்பது குறித்து ஜூன் 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டார். அதுவரை இருவரையும் கைது செய்ய தடை விதித்து விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments