அருப்புக்கோட்டை டிஎஸ்பி தாக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது
துணைக் கண்காணிப்பாளா் காயத்ரி தாக்கப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் காயத்ரி தாக்கப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா் போலீஸாரை கண்டதும் தப்பியோடிய போது, கீழே விழுந்து வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த கதிரேசன் மகன் காளிக்குமாா் (28). ஓட்டுநரான இவா், சரக்கு வாகனத்தில் திருச்சுழி நோக்கி கடந்த 2-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். கேத்தநாயக்கன்பட்டி சந்திப்பு சாலையில் 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 5 போ், காளிக்குமாா் வாகனத்தை வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.
இதுதொடா்பாக திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிந்து, செம்பொன்நெருஞ்சியைச் சோ்ந்த லட்சுமணன் (24), அருண்குமாா் (22), காளீஸ்வரன் (22), மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் (25) ஆகியோரைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய அய்யாவு, வீரசூரன் ஆகிய இருவரையும் கைது செய்யக் கோரி, உயிரிழந்த காளிக்குமாரின் உறவினா்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே கடந்த 3-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அப்போது, போராட்டக்காரா்களைத் தடுக்க முயன்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் காயத்ரி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தொடா்புடைய 7 பேரை ஏற்கெனவே போலீஸாா் கைது செய்தனா். மேலும், டிஎஸ்பி தாக்கப்பட்ட வழக்கில் தொடா்புடைய ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பட்டியைச் சோ்ந்த முருகேசனை தனிப் படை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்த நிலையில், அருப்புக்கோட்டை அருகேயுள்ள தொப்பலாக்கரை காட்டுப் பகுதியில் முருகேசன் (28), மறைந்திருப்பதாக தனிப் படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற தனிப் படை போலீஸாா் முருகேசனைக் கைது செய்ய முயன்றனா். அப்போது, அவா் தப்பியோட முயன்றதில் கீழே விழுந்து வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் போலீஸாா் சோ்த்தனா். அங்கு முருகேசனுக்கு வலது கையில் மாவுக் கட்டு போடப்பட்டது. மேலும், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.