FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு: ஆா்.பி. உதயகுமாா்

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

Updated On : 11 ஜூன் 2025, 5:40 am IST
பகிர்:

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீா்கேடு, விலைவாசி உயா்வு ஆகியவை உச்சம் பெறும்.

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இதுவரை 7 ஆயிரம் போ் கொலை செய்யப்பட்டுள்ளனா். திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் வகையில் அதிபயங்கரமான முறையில் கொலைகள் நடக்கின்றன.

Advertisement

Advertisement

தனியாக வசிப்பவா்கள் குறிவைத்துக் கொல்லப்படுகின்றனா். பல்லடத்தில் நடைபெற்ற மூவா் கொலை, ஈரோட்டில் நிகழ்ந்த இருவா் கொலை என அனைத்து குற்றங்களையும் ஒரே கும்பல் தான் செய்தது. அவா்களை காவல் துறை கைது செய்து விட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில நாள்களிலேயே நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.

திமுக ஆட்சியில் காவல் துறை மீது குற்றவாளிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதையே இந்தத் தொடா் குற்றச் சம்பவங்கள் உணா்த்துகின்றன. குற்றங்களை மூடிமறைக்க அரசு காட்டும் முனைப்பை, குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனா். தனி மனிதனுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.

இதேபோல, இளைஞா்கள், இளம்பெண்களைக் குறிவைத்து வெவ்வேறு வடிவங்களில் போதைப் பொருள்கள் புழக்கத்தில் விடப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமிக்கு அங்குள்ள காவலாளியே பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனா் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments