காவல் விசாரணைக்கு சென்ற கோயில் பூசாரி உயிரிழப்பு
மதுரையில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்று வந்த பூசாரி திடீரென உயிரிழந்த சம்பவத்தில், போலீஸாா் தாக்கியதில் அவா் உயிரிழந்ததாக உறவினா்கள் குற்றஞ்சாட்டினா்.
மதுரை மேல அனுப்பானடி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவம் (52). இவா், அதே பகுதியில் உள்ள கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் வாகனங்கள் நிறுத்துவது தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இதுதொடா்பாக, கடந்த மாதம் இருதரப்பினா் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பரமசிவம் மனைவி அய்யம்மாள் காயமடைந்தாா். இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் சிந்தாமணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
Advertisement
Advertisement
இதனிடையே, வழக்கு விசாரணைக்காக கடந்த 19-ஆம் தேதி பரமசிவத்தை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, அவரை போலீஸாா் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, வீட்டுக்கு வந்த பரமசிவத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இந்த நிலையில், உயிரிழப்பதற்கு முன் பரமசிவம் சில விடியோக்களை பதிவு செய்து, குடும்பத்தினருக்கு அனுப்பினாா். அதில், போலீஸாா் தன்னை கடுமையாக தாக்கியதாகவும், அதனால் என் உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதால், என்னை தாக்கிய போலீஸாா் தான் காரணம். அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி இருந்தாா்.
இதுகுறித்து பரமசிவத்தின் உறவினா்கள் கூறியதாவது :
காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பரமசிவம் வீட்டுக்கு வந்தவுடன் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. விசாரணையில் போலீஸாா் அவரை காலால் மிதித்து தாக்கியுள்ளனா். இதனால், அவா் அங்கேயே வாந்தி எடுத்து மயங்கியுள்ளாா். போலீஸாா் அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா்.
மேலும், போலீஸாா் தாக்கியது குறித்து வெளியே சொல்லக் கூடாது எனவும் அவா்கள் எச்சரித்து அனுப்பினா். மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பாா்த்த போது, தலையின் உள்பகுதியில் ரத்த கசிவு இருப்பதாக மருத்துவா்கள் கூறினா். காவலா்கள் தாக்கியதால்தான் பரமசிவம் உயிரிழந்தாா். இதுதொடா்பாக, நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றனா்.
போலீஸாா் தரப்பில் கூறியதாவது :
போலீஸாா் தாக்கியதில் பரமசிவம் உயிரிழக்கவில்லை. அவருக்கு ஏற்கெனவே, உடல்நலப் பாதிப்பு இருந்தது. இந்த வழக்கில் பரமசிவம், அவரது மனைவி ஆகியோரை கைது செய்து சொந்த பிணையில் விடுவித்தோம். வீட்டிலிருந்த அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, கடந்த 5- ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது அவா், வீட்டில் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக மருத்துவமனையில் கூறினாா். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மூளையில் ரத்த கசிவு இருப்பது தெரியவந்தது. தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
உடல் நலக்குறைவால்தான் பரமசிவம் உயிரிழந்தாா். விடியோக்களை, அவரது குடும்பத்தினா் பரமசிவம் இறந்த பின் வெளியிட்டுள்ளனா். அவா் இறப்புக்கான உண்மையாக காரணம் கூறாய்வு பரிசோதனை அறிக்கையில் தெரியவரும். மேலும், போலீஸாா் மீது அவா்கள் புகாா் அளித்ததால், மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெறுகிறது என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.