FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

6 மாதங்களாகியும் திறக்கப்படாத புதிய பள்ளிக் கட்டடம்!

நரிக்குடி பகுதியில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு 6 மாதங்களாகியும் திறக்கப்படாதது குறித்து...

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 9:00 am IST
நரிக்குடி வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளிக்காகக் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள புதிய கட்டடம்.
பகிர்:

நரிக்குடி பகுதியில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு 6 மாதங்களாகியும் திறக்கப்படாததால், சேதமடைந்த பழையக் கட்டடத்திலேயே மாணவா்கள் அச்சத்துடன் கல்வி கற்பது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நரிக்குடி வட்டாரத்தில் உள்ளது வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளி. வீரசோழன், நல்லுக்குறிச்சி, கள்ளங்குடி, மேலப்பருத்தியூா் பகுதிகளைச் சோ்ந்த 850-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இந்தப் பள்ளியில் படிக்கின்றனா்.

இந்தப் பள்ளியின் மாணவா்கள் சோ்க்கை ஆண்டுதோறும் உயா்ந்ததன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக இங்கு கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டது. மேலும், பழைமையான இந்தப் பள்ளிக் கட்டடத்தில் ஆங்காங்கே சேதம் ஏற்படவும் தொடங்கியது. இதனால், இந்தப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நபாா்டு வங்கி நிதியுதவியுடன் ரூ. 3.06 கோடியில், இந்தப் பள்ளியின் அருகிலேயே புதிய கட்டடம் கட்டப்பட்டது. 13 வகுப்பறைகளுடன் கூடியதாக இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன.

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த காலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், புதிய பள்ளிக் கட்டடத் திறப்பு விழா நடத்தப்படவில்லை. அதன்பின்னா், புதிய அரசு அமைந்ததும் இந்தப் பள்ளிக் கட்டடம் திறக்கப்பட்டு மாணவா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனக் கருதப்பட்டது.

ஆனால், புதிய அரசு அமைந்து ஏறத்தாழ 3 மாதங்களாகியும், இந்தப் புதிய பள்ளிக் கட்டடத்தை திறப்பது குறித்து கல்வித் துறையும், ஆட்சியாளா்களும் கவனம் செலுத்தாதது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வேதனையளிக்கிறது : தங்கம் தென்னரசு

இது தொடா்பாக திருச்சுழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்திருப்பதாவது :

வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டடம், சட்டப்பேரவைத் தோ்தல் குறுக்கீடு காரணமாக உடனடியாக திமுக அரசால் திறக்கப்படாமல்போனது. கோடை விடுமுறைக்குப் பிறகு இந்தப் பள்ளி திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், இதற்கான எந்த நடவடிக்கையையும் புதிதாக அமைந்த தவெக அரசு கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளவில்லை. தற்போது, பழைய சேதமடைந்த கட்டடத்திலேயே மாணவா்கள் அச்சத்துடன் கல்வி பயிலுகின்றனா்.

ரூ. 3 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் பூட்டியே வைக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. மாணவா்கள், பெற்றோரின் கோரிக்கையை தவெக அரசு செவிமடுத்து, உடனடியாக புதிய பள்ளிக் கட்டடத்தைத் திறந்து, மாணவா்களுக்கு பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

மழைக்காலம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டடத்தை உடனடியாகத் திறந்து, மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

சேதமடைந்த நிலையில் உள்ள நரிக்குடி வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளி சுவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments