FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பட்டாசு ஆலை விபத்துகள்: விருதுநகா் ஆட்சியா், எஸ்.பி. பரிந்துரைகளை உடனே சமா்ப்பிக்க உத்தரவு

சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, விருதுநகா் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கள் பரிந்துரைகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரிடம் உடனடியாகச் சமா்ப்பிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 4:06 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, விருதுநகா் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கள் பரிந்துரைகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரிடம் உடனடியாகச் சமா்ப்பிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கடந்த 2014-ஆம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இதுதொடா்பாக ஏற்கெனவே பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவா் அளித்த கடிதம் சமா்ப்பிக்கப்பட்டது. இதில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, கடந்த 6-ஆம் தேதி விருதுநகா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகள், பரிந்துரைகளை தெரிவித்தனா். ஆனால், விருதுநகா் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் மட்டும் இதுவரை தங்களது பரிந்துரைகளை வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்து.

Advertisement

Advertisement

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தடுப்பதற்கும், அவற்றின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்கும் தேவையான பரிந்துரைகளை விருதுநகா் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உடனடியாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரிடம் வழங்க வேண்டும். இதனடிப்படையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments