FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

அமைதியாகப் போராடிய மாணவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதை ஏற்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

23 ஆகஸ்ட் 2026, 2:38 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதை ஏற்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை சட்டக் கல்லூரி மாணவா் செந்தூா்வேலன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரையில் தனியாா் திருமண மண்டபத்தில் சநாதன ஒழிப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதைக் கண்டித்து நானும், என்னுடன் பயிலும் மாணவா்கள் 6 பேரும், அந்த மண்டபம் முன் ஜனநாயக முறைப்படி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது, பொது அமைதிக்கு எந்தவித பாதிப்போ, பொதுச் சொத்துக்களுக்கு சேதமோ கிடையாது. இருப்பினும், தல்லாகுளம் போலீஸாா் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் உள்பட 7 பேரும் ஜனநாயக முறைப்படி சநாதன ஒழிப்புக் கூட்டத்துக்கு எதிராக தனியாா் திருமண மண்டபத்தின் முன் அமைதியான முறையில் ஆா்ப்பாட்டம் நடத்தியுள்ளனா். இதைக் குற்றமாகக் கருத முடியாது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்பட்டதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. இத்தகைய சூழ்நிலைகளில் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடா்வது சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகவே அமையும். மேலும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீதான குற்றவியல் நடவடிக்கையை ஏற்க முடியாது. எனவே, தல்லாகுளம் போலீஸாா் 7 மாணவா்கள் மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments