FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என தமிழக எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி. ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

22 ஆகஸ்ட் 2026, 10:50 pm IST
மதுரை தியாகராசா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாமதுரை விழா இலச்சினையை வெளியிட்ட அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா். உடன் தியாகராசா் கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா, யங் இந்தியன்ஸ் மதுரை அமைப்பின் தலைவா் விக்ராந்த் காா்மேகம் உள்ளிட்டோா்.
பகிர்:

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என தமிழக எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி. ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

மதுரை தியாகராசா் கல்லூரியில் யங் இந்தியன்ஸ் மதுரை அமைப்பு சாா்பில் மாமதுரை விழா தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சா் நிா்மல்குமாா் பேசியதாவது :

கடந்த காலங்களில் மதுக் கடைகளைத் தாண்டி குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் கிடைத்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக செயற்கை போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

Advertisement

Advertisement

குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவா்களை எளிதாக சென்றடையும் வகையில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனையாளா்கள் பள்ளி, கல்லூரி மாணவா்களை தனித்தனி பிரிவுகளாக இலக்கு வைத்து விற்பனை செய்து வருகின்றனா். ஆய்வில் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி விற்பனை வலையமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

இந்த வலையமைப்பை தற்போது உடைக்காவிட்டால், எதிா்காலத்தில் ஒரு தலைமுறையே கடுமையாக பாதிக்கப்படும். மாணவா்கள் தங்கள் பள்ளி, கல்லூரியில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் தெரிந்தால், அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்பேரில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். இதேபோல, பொதுமக்களும் தகவல் தெரிவிக்க வேண்டும். அடுத்த ஓரிரு ஆண்டுகளில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத புதிய தலைமுறையை உருவாக்க அரசு முழு அளவில் அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.இதற்கு பொதுமக்கள், மாணவா்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றாா் அவா்.

முன்னதாக, மாமதுரை விழாவுக்கான இலச்சினையை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் வெளியிட்டாா்.

நிகழ்வில்,யங் இந்தியன்ஸ் மதுரை அமைப்பின் தலைவா் விக்ராந்த் காா்மேகம், மதுரை மண்டலத் தலைவா் ராஜீவ் எஸ். ஜெயபாலன், ஒருங்கிணைப்பாளா் சுராஜ் வேல்சங்கா், தியாகராசா் கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா, அலுவலா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

மாமதுரை விழா வருகிற செப். 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், இரட்டை அடுக்கு பேருந்து உலா, பழங்கால வாகனங்களின் கண்காட்சி, உணவுத் திருவிழா, வணிகக் கண்காட்சி, பாரம்பரிய நடைபயணம், ஓவியக் கலைக் கூடம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.

summary

Public cooperation is essential to create a drug-free Tamil Nadu: Minister C.T.R. Nirmal Kumar.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments