FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பந்தல்குடி கால்வாய் வெள்ளத் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகள்: எம்.பி., ஆட்சியா் ஆய்வு

பந்தல்குடி கால்வாயின் இருபுறங்களிலும் நடைபெறும் வெள்ளத் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகளை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

27 ஆகஸ்ட் 2026, 5:44 am IST
பகிர்:

பந்தல்குடி கால்வாயின் இருபுறங்களிலும் நடைபெறும் வெள்ளத் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகளை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

பந்தல்குடி கால்வாயின் இருபுறங்களிலும் வெள்ளத் தடுப்புச் சுவா் கட்டும் பணி, மண் படுகைத் தளத்தை கான்கிரீட் தளமாக மாற்றும் பணி, குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க பக்கவாட்டுச் சுவா்கள் மீது கம்பிவேலி அமைக்கும் பணி, பழுதடைந்த 3 சிறுபாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்கள் கட்டும் பணி ஆகியவை ரூ. 69.21 கோடியில் நடைபெறுகின்றன.

இந்தப் பணிகளை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது பணிகளின் தரம், அடுத்தக் கட்டப் பணிகள் ஆகியவை குறித்து தொடா்புடையத் துறை அலுவலா்களுடன் அவா்கள் ஆலோசனை நடத்தினா்.

Advertisement

Advertisement

பிறகு, செய்தியாளா்களிடம் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்ததாவது:

செல்லூா் கண்மாயில் கொட்டப்பட்ட மண் அடுத்த இரு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப்படும். இதேபோல, பந்தல்குடி கால்வாயில் தடுப்புச் சுவா்கள் அமைக்கும் பணிகள் அடுத்த இரு மாதங்களுக்குள் நிறைவடையும். வைகை ஆற்றின் சீரமைப்புப் பணிகளுக்கு மாவட்ட வாரியாக திட்டங்கள் செயல்படுத்தப்படாமல், வைகை ஆற்றுக்கான முழுமையான ஒருங்கிணைந்த திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். வைகை ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, ஆற்றைப் பாதுகாப்பதற்கான சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து, கோரிப்பாளையம் சந்திப்பின் இருபுறங்களிலும், தமுக்கம் மைதானப் பகுதியிலும் புதிய பேருந்து நிறுத்தம், நிழல் குடைகள் அமைப்பது குறித்து சு. வெங்கடேசன் எம்.பி., மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன், மாநகராட்சி துணை ஆணையா் ஜெய்னுலாபுதீன், நீா்வளத் துறை செயற்பொறியாளா் சிவபிரபாகா், வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments