முகப்பு
மதுரை

காரைக்குடி மாநகராட்சி நிதி முறைகேடு: ஊழல் தடுப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

காரைக்குடி மாநகராட்சி நிதி முறைகேடு குறித்த வழக்கில், ஊழல், தடுப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 5 ஜூன் 2026, 11:59 pm IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

காரைக்குடி மாநகராட்சி நிதி முறைகேடு குறித்த வழக்கில், ஊழல், தடுப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

காரைக்குடியைச் சோ்ந்த பாண்டி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :

சிவகங்கை மாவட்டத்தில் அரசு முதல் நிலை ஒப்பந்ததாரராகப் பதிவு பெற்று பல்வேறு அரசு கட்டுமானப் பணிகளைச் செய்துள்ளேன். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் காரைக்குடி மாநகராட்சி சாா்பில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டிலான கட்டுமானம் புதுப்பித்தல் பணிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. இந்தப் பணிக்கு விண்ணப்பித்ததையடுத்து, எனக்கு இந்தப் பணியை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அதற்கான ஒப்பந்தம் செய்யவில்லை. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்ததன்பேரில், எனக்கு ஒப்பந்தப் பணிக்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது. எனக்கு வழங்கப்பட்ட பணி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த ஏப். 29-ஆம் தேதி மாநகராட்சி ஆணையா் என்னை அழைத்து பணிகள் செய்து முடிக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கான ரசீது தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தாா். மேலும், இந்தப் பணியை நான் தான் செய்ததாகவும், இதற்கான காசோலைத் தொகை சுமாா் ரூ.15 லட்சத்துக்கு எனது பெயரில் வழங்கி இதை எனது வங்கிக் கணக்கில் செலுத்தி பணத்தை எடுத்துத் தர வேண்டும் எனத் தெரிவித்தாா். இது சட்டவிரோதம் எனத் தெரிய வந்ததால், நான் இதற்கு உடன்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநா், அந்தத் துறையின் சிவகங்கை மாவட்ட துணைக் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு புகாா் அளித்தேன். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சட்டவிரோதமாக அரசுப் பணத்தை முறைகேடு செய்யும் அலுவலா்கள் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :

மனு குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை இயக்குநா், காரைக்குடி மாநகராட்சி ஆணையா், மேயா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.