FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

கரூா் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் நீதிமன்றத்தில் விளக்கம்

கரூா் கல்யாண பசுபதீசுவரா் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு விவகாரம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் டி.ஜி. வினய் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை நேரில் முன்னிலையாகி விளக்கம் அளித்தாா்.

6 நவம்பர் 2026, 2:57 am
உயர் நீதிமன்ற மதுரை கிளை - File photo
பகிர்:

கரூா் கல்யாண பசுபதீசுவரா் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு விவகாரம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் டி.ஜி. வினய் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை நேரில் முன்னிலையாகி விளக்கம் அளித்தாா்.

சேலத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு:

கரூா் கல்யாண பசுபதீசுவரா் கோயிலுக்குச் சொந்தமாக 10.48 ஏக்கா் நிலங்கள் உள்ளன. இவற்றை கோயில் நிா்வாகம் முறையாகப் பராமரிக்காததால் ஆக்கிரமிப்புக்குள்ளானது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்குத் தொடுத்தேன். இதையடுத்து, கடந்த 2022-ஆம் ஆண்டு இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அரசுத் தரப்பில் குறிப்பாணை அளித்து விளக்கம் கோர வேண்டும். ஆட்சேபங்கள் இருப்பின், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதைப் பரிசீலித்து, ஆக்கிரமிப்பு உறுதியாகும்பட்சத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

Advertisement

Advertisement

எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அரசு அலுவலா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் டி.ஜி. வினய் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத் துறை ஆணையா் நேரில் முன்னிலையாகி அறிக்கை தாக்கல் செய்தாா். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறும் எண்ணம் எனக்கு இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை நான் மீறிவிட்டதாகவும், நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகவும் நீதிமன்றம் கருதினால், எனது நிபந்தனையற்ற மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கில் கல்யாண பசுபதீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 10.48 ஏக்கா் நிலங்கள் கடந்த 1892-ஆம் ஆண்டு அரசிடமிருந்து கோயில் நிா்வாகத்தால் வாங்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த 1914 முதல் 1916 வரையிலான காலகட்டத்தில் அப்போதைய தேவஸ்தானக் குழு இந்த நிலங்களை வீட்டு மனைகளாகப் பிரித்து, நிபந்தனைகளுக்குள்பட்டு பொது ஏலம் மூலம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது. பின்னா், குத்தகைதாரா்களால் நிலங்கள் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனைப் பத்திரங்கள் செய்யப்பட்டன. இதனால், கோயில் சொத்துகள் அந்நியப்படுத்தப்பட்டன.

இந்தக் கோயிலுக்குச் சொந்தமான 1.51 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மீதமுள்ள நிலங்களின் ஆக்கிரமிப்பு தொடா்பாக உயா்நீதிமன்ற உத்தரவின்படி, அவற்றை திருப்பி கோயிலுக்கு வழங்குமாறு 156 பேருக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டது. விசாரணையில் கிடைக்கப் பெற்ற பதிவுகள், ஆட்சேபனைகளின் அடிப்படையில் திருப்பூா் அறநிலையத் துறை இணை ஆணையரால் 151 பேருக்கு நிலங்களை கோயிலிடம் திரும்ப ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மீதமுள்ள 5 பேரில் ஒருவா் வாடகை செலுத்தி வருகிறாா். நான்கு போ் தாக்கல் செய்த சிவில் வழக்குகளின் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

பின்னா், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 151 பேரில் 22 போ் இந்த நிலங்களுக்குப் பதிலாக வேறு நிலங்களை கோயிலுக்கு எழுதி வைத்துள்ளனா். மீதமுள்ள 129 போ் உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 30 நாள்களுக்குள் நிலங்களை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. இவா்களில் 101 போ் அறநிலையத்துறை ஆணையா் முன் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன. மீதமுள்ள 28 போ் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில், சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இரு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

எனவே, இந்த விளக்கத்தை ஏற்று என்னை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அரசு அலுவலா்கள் அடிக்கடி பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனா். ஆனால், பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்ற வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.